கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் கேரளாவுக்கு 350 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலம்: மாநில எல்லை பகுதி மக்கள் அதிருப்தி

கூடலூர்: கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் கேரளாவுக்கு 350 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எல்லை பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.    நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கேரளாவை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இருமாநில போக்குவரத்து மாநில எல்லையான நாடுகாணி, சோலாடி, தாளூர், நம்பியார்குன்னு, பாட்டவயல் வழியாக நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, இவ்வழியே அத்தியாவசிய வாகனங்கள் சென்றுவர மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடலூர், பந்தலூர் மக்கள் கேரளா செல்ல, ஊட்டி, மேட்டுப்பாளையம் வழியாக, கோவை சென்று, வாளையார் வழியாக மட்டுமே, கேரளா செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் 50 கி.மீ. தொலைவில் உள்ள மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு செல்ல, கூடுதலாக, 350 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: நீலகிரி மக்கள் கேரளாவிற்கு சென்று வர, கூடலூர் வழி எளிதாக உள்ளது. தற்போது, இ-பாஸ் பெற்று வாளையார் வழியாக கேரளா செல்ல வேண்டியுள்ளது. கொரோனா ஊடங்கிற்கு முன் கேரளாவில் இருந்து வந்த பலர் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீடுகளில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இவர்கள் இ-பாஸ் பெற்று திரும்பி செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, கூடலூர் அடுத்துள்ள மாநில எல்லை வழியாக கேரளா செல்ல அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: