ஆயுஷ்மான் திட்டத்தில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை: 53 கோடி பேர் பயன் பெறலாம்

புதுடெல்லி: மத்திய அரசின் தேசிய பொதுச் சுகாதார திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் நோய்களில் கொரோனா நோய் தொற்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் ஒரு லட்சம் பேரை பாதித்துள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளது. இந்த வைரசை கொல்வதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க உலகளவில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள 10.74 கோடி ஏழை, நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்த 53 கோடி மக்கள் பயனடையும் வகையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை  அமல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தில் சிகிச்சை பெறக் கூடிய நோய்களின் பட்டியலில், கொரோனா நோய் தொற்றையும் மத்திய அரசு சேர்த்துள்ளது. இதன் மூலம், தற்போது நாடு முழுவதிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இத்திட்ட பயனாளிகளில் 2,132 பேர் இலவச சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 53 கோடி பேருக்கும் இலவச கொரோனா பரிசோதனை செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஒரு கோடி பேர் பயன்

ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் 2018ம் ஆண்டு, பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியுள்ளது. இதில், ஒரு கோடியாவது நபராக பயன் பெற்ற பெண்ணுடன் மோடி நேற்று தொலைபேசியில் பேசி, விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: