ஊரடங்கு காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இ-உண்டியலில் 1.97 கோடி காணிக்கை: கடந்தாண்டை காட்டிலும் அதிகம்

திருமலை: ஊரடங்கிலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இ-உண்டியலில் 1.97 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இது கடந்தாண்டை காட்டிலும் அதிகம். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 20ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் திருமலை பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்து வருகிறது.  வழக்கமாக பக்தர்கள் ஏழுமலையான் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து காணிக்கை செலுத்திவிட்டு செல்வார்கள்.

ஆனால் கோயிலுக்கு வர முடியாத பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே சுவாமிக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை  இ-உண்டியல் மூலமாக செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1.79 கோடியை பக்தர்கள் ஆன்லைன் மூலமாக இ-உண்டியலில் காணிக்கை செலுத்தி இருந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கோயிலுக்கு பக்தர்கள் வரமுடியவில்லை.

 இருந்தாலும் தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஏழுமலையானுக்கு  பக்தர்கள் ஆன்லைன் மூலம் இ- உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 1.97 கோடியை இ-உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கிடைத்த இ உண்டியலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: