சொந்த ஊர் செல்ல வேண்டும் என்று கேட்ட வடமாநில தொழிலாளரை சரமாரியாக தாக்கி செங்கல் சூளையில் சிறை வைத்த கொடூரம்

* சேம்பர் மேலாளர் கைது; உரிமையாளர்கள் தலைமறைவு

*  புதுகுப்பம் கிராம செங்கல் சேம்பரில் ஒடிசாவை சேர்ந்த 326 பேர் பணியாற்றுகின்றனர்.

* ஊரடங்கால் வேலையின்றி தவித்த இவர்களை சொந்த ஊருக்கு அனுப்பாமல் சேம்பர் உரிமையாளர்கள் செங்கல் சூளையிலேயே சிறைவைத்தனர்.

* ஊருக்கு அனுப்பக்கோரி போராட்டம் நடத்தியதால் தொழிலாளர்களை உரிமையாளர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

சென்னை: பெரியபாளையம் அருகே சொந்த ஊருக்கு செல்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களை தாக்கி, சிறை வைத்த சேம்பர் மேலாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை அடுத்த பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த புதுகுப்பம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சேம்பர் உள்ளது. இங்கு, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 326 பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 24  முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், சேம்பர்களில் பணியாற்றும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

குறிப்பாக பெரியபாளையம் அடுத்த  தாமரைப்பாக்கம்  அருகேயுள்ள புதுகுப்பம் கிராமத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு  தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என  போராட்டம் நடத்தினர். இதனால் அவர்களுக்கு வேலை வழங்காமலும், சம்பளம் வழங்காமலும் சேம்பரிலேயே சேம்பர் உரிமையாளர்கள் சிறை வைத்தனர். அப்படியும் போராட்டம் தொடர்ந்ததால் ஆத்திரம் அடைந்த சேம்பர் உரிமையாளர்  முனுசாமி, அவருடைய தம்பி  லட்சுமிபதி, மேலாளர் ஆசிர்வாதம்  ஆகியோர் வடமாநில ஊழியர்களை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில், தும்பாபரியா, நயவன், கோபால்சுபாவ், பெண் தொழிலாளர்  ரிசிவந்தி ஆகிய 4 பேரை பலத்த காயம் அடைந்தனர்.

இது குறித்த புகாரின்பேரில், வெங்கல் காவல் நிலைய போலீசார் சேம்பர் மேலாளர் ஆசிர்வாதம் (35) கைது செய்தனர். மேலும், தலைமறைவான உரிமையாளர் முனுசாமி, அவரது தம்பி லட்சுமிபதி ஆகியோரை தேடி வருகிறார். மேலும், காயமடைந்த வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதற்கிடையில் செங்கல் சூளையில் ஊழியர்கள் கொத்தடிமையாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிந்தவுடன் பத்திரிகையாளர்கள் விரைந்து சென்றனர். தங்களை காக்க வந்தவர்கள் என்று கருதி, அவர்களின் காலில் விழுந்து, தங்களை காப்பாற்றும்படி கெஞ்சினர். உணவு சாப்பிடாமல் கஷ்டப்படுவதாக கதறி அழுதனர்.

இது குறித்து திருவள்ளூர் ஆர்டிஒ வித்யாவுக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள், எங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவையுங்கள் என அழுதனர். இதை கேட்ட ஆர்டிஒ வடமாநில தொழிலாளர்களிடம், ஒரு வாரத்திற்குள் உங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்துள்ளார்.  இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: