மீண்டும் வெளியே வராததால் மர்மம் வடகொரிய அதிபர் கிம் மரணம்? சிலைகள் மாயம், படங்கள் அகற்றம்

பியாங்யாங்: வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் மரணம் அடைந்துவிட்டாரா என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தினால் உலக நாடுகள் அனைத்தும் சுருண்டு கிடந்த போதிலும், வட கொரியா மட்டும் அதிபர் கிம் ஜாங் உன்னின் உத்தரவுப்படி, ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருந்தது. இதனால் உலக நாடுகள் வாயடைத்து போய் இருந்தன. இதனிடையே, கடந்த மாதம் தொடக்கத்தில் கிம் ஜாங் உன் காணாமல் போனதாகவும் மூளை சாவு அடைந்து இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, 21 நாட்களுக்கு பிறகு வட கொரியாவின் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி நடந்த உரத் தொழிற்சாலை திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டதாக வீடியோ வெளியானது. பின்னர், கடந்த இரண்டு வாரங்களாக அவர் மீண்டும் காணாமல் போய் உள்ளார். இதனால், அந்த வீடியோவில் தோன்றியது அவர் தானா என்றும் திறப்பு விழாவில் பங்கேற்றவருக்கும் கிம் ஜாங் உன்னுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகவும் இணையத்தில் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகின.

இந்நிலையில், முன்னாள் அதிபர்களின் புகைப்படங்கள், சிலைகள் அகற்றப்பட்டது கிம் ஜாங் இறந்து விட்டாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பத்திரிகையாளர் ராய் கேலே கூறியதாவது:பியாங்யாங்கில் உள்ள கிம் இல் சங் நினைவு சதுக்கத்தில் இருந்து கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் இல் சங், தந்தை கிம் ஜாங் இல் ஆகியோரின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த கிம் இல் சங்கின் சிலையும் நீக்கப்பட்டுள்ளது. திடீரென இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது, கிம் ஜாங் உன் இறந்து விட்டாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் கடந்த 2012ல் அவரது தந்தை இறந்த போது தான் இது இடிக்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இப்போது, திடீரென இங்கு சிலைகள் அகற்றப்படுவது கிம் ஜாங் பற்றி பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த இடங்களில் கிம் ஜாங்கின் சிலைகள், புகைப்படங்கள் நிறுவப்படலாம் என கருதப்படுகிறது.மேலும் செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், வடகொரியாவில் ராணுவ அணி வகுப்பு மரியாதை நடத்தும் திடல் உள்ளிட்டவையும் இடிக்கப்பட்டுள்ளது இடம் பெற்றுள்ளது. மேற்கு நுழைவாயிலில் இருந்து நினைவு சதுக்கத்திற்கு வரும் வழியும் அடைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், கிம் ஜாங் உன் இறந்திருந்தால் இந்நேரம் அவரது சகோதரி பதவிக்கு வந்திருக்கக் கூடும் என்றார்.

காரணம் என்ன?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 15ம் தேதி நாட்டின் ராணுவ புலனாய்வு அமைப்பின் தலைவர், தனது தனிப்பட்ட பாதுகாப்பு தலைவர், ராணுவப் பிரிவு தலைவர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்க விட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம், கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிம் ஜாங், வட கொரியாவின் அணு ஆயுத சக்தியை உலக நாடுகள் விரைவில் பார்க்கும் என்று பேசியிருந்தார். அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி நடைபெற இருக்கும் நாட்டின் 75வது ஆண்டு விழாவையொட்டி, ராணுவ அணிவகுப்பை பறைசாற்றவே சதுக்கம் இடிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், படங்கள் அகற்றப்பட்டு, சிலைகள் இடிக்கப்பட்டதாகவும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: