அம்பன் புயல் முன்னெச்சரிக்கை பிரதமர் தலைமையில் ஆலோசனை

புதுடெல்லி: வங்க கடலில் உருவாகியுள்ள அம்பன் புயல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இதற்கு அம்பன் புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இது வலுப்பெற்று மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. அம்பன் புயல் அதிக தீவிரம் பெற்று சூப்பர் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்கு வங்கம், வங்கதேச கடற்கரை இடையே திக்கா மற்றும் ஹடியா இடையே நாளை புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அப்போது மணிக்கு 185கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம், அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் நாளை மறுதினம் வரை கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அம்பன் புயலை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு, பேரிடர் மீட்பு துறை உள்ளிட்டவை மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பேரிடர் மேம்பாட்டு ஆணையத்தின் உயரதிகாரிகள் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அம்பன் புயலை எதிர்கொள்வதற்காக மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்களால் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பேரிடர் மீட்பு குழு இயக்குனர் ஜெனரல், 25 மீட்பு குழுவினர் பல்வேறு மாநிலங்களிலும் பணியில் ஈடுபடுவதற்காக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

Related Stories: