புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணச்செலவு: அம்மாடியோவ்... நிர்மலா சீதாராமன் எவ்வளவு பொய் சொல்றாங்கப்பா...மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

மும்பை: வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் பயணத்துக்கான செலவில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது உண்மைக்கு மாறான தகவல் என்று மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் குற்றம்சாட்டினார். வெளிமாநிலங்களில் சிக்கியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. இந்த ரயில்களில் பயணம் செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாகவும் எஞ்சிய 15 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கின்றன என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கூறியிருந்தார்.

ஆனால், இது உண்மைக்கு மாறான தகவல் என்று மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆகும் ரயில் டிக்கெட் கட்டணத்திற்கான செலவில் 85 சதவீதத்தை மத்திய அரசு (ரயில்வே) ஏற்றுக் கொள்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்து போனேன். அவர் கூறியதில் உண்மையில்லை. இது உண்மைக்கு மாறானது. மகாராஷ்டிராவில் இருந்து இதுவரை சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்களில் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முழு டிக்கெட் கட்டணத்தையும் மாநில அரசுதான் செலுத்தியுள்ளது.

முதலில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த செலவில் டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர். ஆனால், ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்த அவர்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று ரயில்வேயிடம் மகாராஷ்டிரா அரசு கேட்டுக் கொண்டது. ஆனால், அந்த வேண்டுகோளை ரயில்வே ஏற்க மறுத்துவிட்ட பிறகு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் டிக்கெட் கட்டணச் செலவு முழுவதையும் மகாராஷ்டிரா அரசு ஏற்றுக் கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.

20 லட்சம் தொழிலாளர்கள் பதிவு

மகாராஷ்டிராவில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல 20 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்குவங்கம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் அனில் தேஷ்முக் கூறினார். அவர் மேலும் கூறுகையில், ‘‘சொந்த ஊர்களுக்கு செல்ல 20 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ள போதிலும், அவர்களை ஏற்றுக் கொள்ள பீகார் மற்றும் மேற்குவங்க மாநில அரசுகள் மறுத்து வருகின்றன. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் முதல்வர் உத்தவ் தாக்கரேயும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் இது சம்பந்தமாக பேசியுள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து நல்ல பதில் வர காலதாமதமாகிறது’’ என்றார்.

Related Stories: