திருக்குறுங்குடி பெரியகுளத்தில் 19 ஆண்டுக்கு பிறகு நடுமடை சீரமைப்பு பணிகள் தீவிரம்: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

களக்காடு: திருக்குறுங்குடி பெரியகுளத்தில் 19 ஆண்டுகளுக்கு பின் நடுமடை சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மடை சீரமைப்பு பணிக்காக குளத்தின் கரையான களக்காடு - பணகுடி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.  களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் உள்ள பெரியகுளம் அப்பகுதியின் முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரியகுளங்களில் இந்த குளமும் ஒன்றாகும், இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்தகுளத்தில் உள்ள நடுமடை கடந்த 1974ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. நாளடைவில் மடை பழுதடைந்தது.

 இதைத்தொடர்ந்து 2001ம் ஆண்டு புனரமைப்பு பணிகள் நடந்தன. அதன்பின் நடுமடையில் பராமரிப்பு பணி நடைபெறவில்லை. இதனால் மடை மீண்டும் பழுதடைந்தது. மழை பெய்து குளம் நிரம்பி ததும்பும் போது மடையின் வழியாக கசிவு ஏற்பட்டு நீர் வெளியேறி வந்தது. குளத்தின் கரைகளும் வழுவிழந்து, தடுப்பு சுவர்களும் இடிந்து விழுந்தன.

 மடை பழுது காரணமாக குளம் உடையும் அபாயம் ஏற்படுவதும், அதனை அதிகாரிகள் மண் போட்டு தற்காலிகமாக சீரமைப்பதும் ஆண்டு தோறும் நடக்கும் வாடிக்கையாகி விட்டது. எனவே நடுமடையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ 68 லட்சம் மதிப்பீட்டில் நடுமடையை சீரமைக்க பொதுப்பணித்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பொதுப்பணித்துறையினர் ஒதுக்கீடு செய்த ரூ 34 லட்சம் போக மீதி ரூ.34 லட்சத்தை திருக்குறுங்குடி ஸ்ரீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையினர் செலுத்தியுள்ளனர்.  இதன் மூலம் நடுமடை சீரமைப்பு பணிகள் துவங்கின. இப்பணிகளை ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவக்கிவைத்தார்.

இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மதனசுதாகரன், உதவி பொறியாளர் பாஸ்கர், அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெயராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார், னிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குநர் முருகன், பெரியகுளம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் தங்கத்துரை, பொருளாளர் மாடசாமி, மாவடி தொழிலதிபர் கண்ணன், வக்கீல் சந்திரசேகர், ஆறுமுகநயினார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மடை சீரமைப்பு பணிக்காக குளத்தின் கரையான களக்காடு - பணகுடி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு 19 ஆண்டுகளுக்கு பிறகு மடை சீரமைப்பு பணி தற்போது தீவிரமாக நடந்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: