ஒலிபெருக்கியில் அழைப்பு விடுக்க உ.பி. மாவட்ட நிர்வாகங்கள் விதித்த கட்டுப்பாடு சரிதான்: அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

அலகாபாத்: ‘ஒலிபெருக்கி மூலம் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்கு உ.பி. மாவட்ட நிர்வாகங்கள் விதித்த கட்டுப்பாடுகளை நீக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் உத்தரபிரதேச காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அப்சல் அன்சாரி, மூத்த வக்கீல்கள் சல்மான் குர்ஷித், காத்ரி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ‘ உத்தர பிரதேசத்தில் உள்ள காசிப்பூர்,  பருகாபாத் மாவட்டங்களில் வசிக்கும் இஸ்லாமியர்களை தொழுகைக்கு அழைப்பதற்கு மசூதியில் இருந்து ஒலிபெருக்கியை பயன்படுத்த, ஊரடங்கை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இதை சட்ட விரோதம் என்று அறிவித்து, தொழுகைக்கு ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுக்க அனுமதி அளிக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி சசிகாந்த் குப்தா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்து அளித்த தீர்ப்பில், ‘தொழுகைக்கு அழைப்பு விடுப்பது சம்பிரதாயமாக இருக்கலாம். ஆனால், இதற்காக ஒலி பெருக்கி பயன்படுத்துவதை அரசியலமைப்பு அடிப்படை உரிமையாக கருத முடியாது. மேலும், மற்றவர்கள் தாங்கள் கேட்க விரும்பாததை கேட்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. அது, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25ல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை பறிப்பது போலாகி விடும். எனவே, மாவட்ட நிர்வாகங்கள் ஒலிபெருக்கியை பயன்படுத்த கட்டுப்பாடு விதித்தது சரிதான்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: