விபத்தில் நர்ஸ் பலி எதிரொலியால் தர்மபுரி மருத்துவமனையில் செவிலியர்கள் போராட்டம்: எந்த வசதியும் செய்யப்படவில்லை என புகார்

தர்மபுரி: காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் நர்ஸ் உயிரிழந்ததன் எதிரொலியாக, தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்திலேயே உணவு வசதி, ஓய்வறை ஏற்படுத்தி கொடுக்க வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் வசிப்பவர் புகழேந்தி. இவரது மனைவி குமுதா(38). இதே பகுதியைச் சேர்ந்த மாதையன் மனைவி பாலாமணி (44). இருவரும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், செவிலியர்களாக பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு பணி முடிந்து இருவரும், டூவீலரில் காவேரிப்பட்டணத்திற்கு சென்றனர்.

தர்மபுரி மாவட்ட எல்லையான சப்பானிப்பட்டியை கடந்து பையூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் வேகமாக சென்றது. அப்போது சாலையை கடந்த நாய் மீது மோதாமல் இருக்க திருப்பும் போது தடுப்பு சுவரில் மோதி இருவரும் படுகாயமடைந்தனர். அப்பகுதியினர் இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குமுதா உயிரிழந்தார். பாலாமணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் உரிய வாகன வசதியோ அல்லது தங்கும் வசதியையோ ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது என்று கூறி நேற்று தர்மபுரி அரசு மருத்துவமனையில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் 80க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த, டீன் பசுவதி, ஆர்டிஓ தேன்மொழி, தாசில்தார் சுகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து செவிலியர்கள் ஒரு மணி நேர போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு சென்றனர். இதுகுறித்து செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் சரவணன், தமிழ்செல்வி கூறுகையில்,

தர்மபுரி அரசு மருத்துவமனையில் 340க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகிறோம். கொரோனா தடுப்பு  பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். செவிலியர்கள் தங்குவதற்காக தனியார் பள்ளியில் 2 அறைகளை ஒதுக்கியுள்ளனர். ஒரு அறையில் பெண் செவிலியர்களும், இன்னொரு அறையில் ஆண் செவிலியர்களும் தங்கியுள்ளனர். ஒரு அறையில் 30 பேர் வரை தங்கி உள்ளனர். சாப்பாடு வசதி கிடையாது.

பொது கழிப்பறையைத்தான் பயன்படுத்தி வந்தனர். இதனால் ஊருக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சாப்பாடு, சமூக இடைவெளியுடன் கூடிய தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருந்தால் இந்த 2 நர்சுகளும் விபத்தில் சிக்கி இருக்க மாட்டார்கள். இனிமேலாவது இந்த வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: