ஒரு பக்கம் கொரோனா; ஒரு பக்கம் பசி: வாழ வழியின்றி தவிக்கும் ஜிம்பாப்வே மக்கள்

ஹராரே: உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் ஜிம்பாப்வேயில் ஒரு வாளித் தண்ணீருக்காக மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 308,450 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 4,624,034 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,757,128 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,008  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய கொரோனா ஜிம்பாப்வே நாட்டையும் விட்டுவைக்கவில்லை. இங்கும் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் மக்களுக்கு அதைவிட பெரிய பெரிய பயத்தை தந்திருக்கிறது தண்ணீர் பஞ்சம், நாள் ஒன்றுக்கு ரேஷன் முறையில் வெறும் 40 லிட்டர் தண்ணீர்தான் அதாவது நம் ஊரில் உள்ள 2 குடம் அளவுக்குதான் தரப்படுகிறது. அதனால்தான் Chitungwiza நகரத்தில் இறந்துபோன உறவினரைக் கூட விட்டுவிட்டு பலரும் தண்ணீர் பிடிக்க ஓடி வருகிறார்கள்.

கொரோனா வராமல் இருக்க தனிமனித இடைவெளி அவசியம் என்ற அரசின் அறிவுரை எல்லாம், தண்ணீர் காலியாகிவிடுமோ என்ற அச்சத்தில் காணாமல் போய் விடுகிறது. அடிகுழாய்கள் முன் வரிசை கட்டி நிற்கின்றன. ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா பரவலால் 3 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தாலும், பசி மற்றும் தண்ணீர் பஞ்சத்தால் மடிவதை விட கொரோனா பெரிய அச்சமாகத் தெரியவில்லை என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: