ருசி கண்ட பூனையானது மத்திய அரசு: ஊரடங்குக்கு பிறகும் ‘ஒர்க் அட் ஹோம்...’கருத்து கேட்டு அனைத்து துறைகளுக்கும் கடிதம்

* நாட்டில் மொத்தம் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர்.

* மத்திய அரசின் கீழ் 51 அமைச்சகங்கள், 56 அரசுத்துறைகள் உள்ளன.

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊரடங்குக்குப் பிறகும் ‘ஒர்க் அட் ஹோம்’ திட்டத்தை தொடர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது பற்றி  வரும் 21ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கும்படி அனைத்து அமைச்சகங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.  நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  தனியார் நிறுவனங்கள் தனது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதித்து உள்ளது. அதேபோல், மத்திய அரசின் அனைத்து  துறைகளின் ஊழியர்களும் வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர். இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுவது, மத்திய அரசுக்கு மகிழ்ச்சி  அளித்துள்ளது. இதில், ஒரே கல்லில் அது இரண்டு மாங்காய் அடித்துள்ளது.

ஒன்று, கொரோனா பரவலை கட்டுப்படுத்தி இருக்கிறது. 2வது, அலுவலக வாடகை, மின்சாரம், ஏசி கட்டணங்கள், கார் பெட்ரோல், டீசல் செலவுகள்  உள்ளிட்ட பல்வேறு நிர்வாக செலவுகளும் மிச்சமாகி இருக்கின்றன. அதோடு, ஊழியர்கள் வேலை செய்வதும் திருப்திகரமாக இருக்கிறது. எனவே,  ஊரடங்குக்குப் பிறகும் மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ‘ஒர்க் அட் ஹோம்’ கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு  பரிசீலித்து வருகிறது. இது பற்றி கருத்து தெரிவிக்கும்படி அனைத்து அமைச்சகங்களுக்கும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம்   சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

இதில் கூறப்பட்டு இருப்பதாவது:

* நாடு முழுவதும் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். ஊரடங்குக்குப் பிறகும் இவர்களை ஆண்டுக்கு ஒருமுறை குறைந்தது 15 நாட்கள்  வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதிக்கலாம்.

* மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டங்கள் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டு,  உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதால் அலுவலகப் பணிகள் தொய்வின்றி தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. எனவே, ஊரடங்குக்குப் பிறகு  மத்திய அரசு அலுவலகங்களில் மாறுப்பட்ட வருகைப் பதிவு, பணி நேர அடிப்படையில் ‘ஒர்க் அட் ஹோம்’ செயல்படுத்த பரிசீலிக்கப்படுகிறது.

* தற்போது 75 அமைச்சகங்கள், துறைகளில் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதில், 57 துறைகளில் 80  சதவீத பணிகள் சிறந்த முறையில் நடைபெற்றுள்ளது.

* எனவே, ஒர்க் அட் ஹோம் திட்டத்தை அமல்படுத்தும் புதிய திட்டம் பற்றி அனைத்து துறைகளும் வரும் 21ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க  வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

லேப்டாப் இன்டர்நெட் செலவை அரசே தரும்

‘வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு அலுவலகத்தில் வழங்கப்படும் மடிக்கணினியை மட்டுமே அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும். இதற்கான  இன்டர்நெட் செலவுகளை அவர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்,’ என்றும் சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்து கூறாவிட்டால்சம்மதமாக கருதப்படும்

சுற்றறிக்கையில் மேலும், ‘ஒர்க் அட் ஹோம்’ வரைவு திட்டம் குறித்து வரும் 21ம் தேதிக்குள் பணியாளர் அமைச்சகத்துக்கு தங்கள் கருத்துகளைத்  தெரிவிக்க வேண்டும். கருத்துகள் பெறப்படா விட்டால், அத்துறை அதற்கு உடன்படுவதாக எடுத்து கொள்ளப்படும்,’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: