கடலூர் அருகே பேய் பீதியில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் கிராமமக்கள்

கடலூர்: கடலூர் அருகே பேய் பீதியில் வீடுகளுக்குள் கிராம மக்கள் முடங்கி கிடக்கின்றனர். கடலூர் முதுநகர் அருகே பச்சையாங்குப்பம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள், தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள், உள்ளூர் மீனவர்கள் வசித்து வருகின்றனர். மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் அக்கிராமத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கியது. இந்நிலையில் மே 8ம் தேதி தொடங்கி அடுத்தடுத்து நடந்த திகிலூட்டும் நிகழ்வுகளால் கிராமமே பீதியில் உறைந்தது. கடந்த 8ம் தேதி பச்சையாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சாலை விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர். அதே நாளில் அதே தெருவை சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர் அவர் வீட்டு மொட்டை மாடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஒரே தெருவில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது .மறுநாள் 9ம் தேதி கிழக்கு தெருவை சேர்ந்த 45 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அப்பகுதி ஓடை வழியாக குலதெய்வம் கோயிலுக்கு சென்றார். அப்போது படையெடுத்து வந்த ராட்சத விஷக்குளவிகள் அவரை கொட்டின.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். அடுத்த நாள் நடுத்தெருவை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். வெளியூரை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் அதிகாலை 3 மணி அளவில் பச்சையாங்குப்பம் சுடுகாடு வழியாக மீன் வாங்க உப்பனாற்றுக்கு சென்றதாக தெரிகிறது .அப்போது சுடுகாட்டு பகுதியில் வெள்ளை போர்வையை போட்டு கூட்டமாக மீன் வியாபாரியை நோக்கி மர்ம உருவங்கள் வந்ததாகவும், இதை பார்த்து பீதி அடைந்த அவர் தப்பிச் செல்ல முயன்றபோது வண்டியுடன் கீழே விழுந்து படுகாயமடைந்து மயக்கி விழுந்தார்.  

தொடர் மரணங்களும், மீன் வியாபாரியை மர்ம உருவங்கள் துரத்தி வந்த சம்பவமும் கிராம மக்களின் நிம்மதி குலைத்தன. அதனை அடுத்து  அப்பகுதி முத்தாலம்மன் கோயிலில் ஊர் மக்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். அப்போது ஒரு பெண் தான் அங்காளம்மன் வந்திருப்பதாக கூறி சாமி ஆடினார். பச்சையாங்குப்பம் கிராமத்தில் தலையில்லாத முண்டம் ஒன்று நடமாடுவதாகவும், அது இன்னும் பல பேரை பலி வாங்குவதற்குள் கிராமத்தைச் சுற்றி எல்லை கட்டு மாறும் ஆவேசமாக கூறியதால் அப்பகுதி மக்கள் திகிலின் உச்சத்தை அடைந்தனர். இதனால் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் நடுத்தெரு, கிழக்குத்தெரு, கோவில் தெரு கொய்யாத்தோப்பு ரோட்டு தெரு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மாலை 6 மணிக்கே கிராமத்தில் மக்கள் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர் .பேய் பீதியில் வெளியே யாரும் நடமாடுவது இல்லை. இந்நிலையில் பேய் பயத்திற்கு முடிவுகட்ட இன்று பச்சையாங்குப்பம் கிராமத்தில் முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இரவு எல்லை கட்டும் நிகழ்ச்சி நடத்த இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: