டாஸ்மாக் திறக்கும் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு அப்பீல்: தமிழக அரசு தாக்கல்

புதுடெல்லி: டாஸ்மாக் திறக்கும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேலும் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளது.  கொரோனா நோய் தொற்று விவகாரத்தில் மத்திய அரசின் தளர்வுகளை தொடர்ந்து கடந்த 7ம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சமூக இடைவெளி உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கலாம் என உத்தரவிட்டது.  இதைத்தொடர்ந்து 2 நாட்கள் வரை டாஸ்மாக் திறக்கப்பட்டு, மது விற்பனையும் நடந்தது.

இதையடுத்து டாஸ்மாக் கடை திறக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த எந்த ஒரு நிபந்தனைகளையும் அரசு பின்பற்றவில்லை என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மே-17ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தது. ஆனால் ஆன்லைனில் விற்கலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் போனிபேஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

 கொரோனா காலத்தில் ஆன்லைனில் மது விற்பனை செய்யலாம் என உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதை தடை செய்ய வேண்டும். மேலும் இந்த ஊரடங்கு காலம் மற்றும் கொரோனா தொற்று  முழுமையாக நீங்கும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க அனுமதி வழங்கக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வாதத்தில் டாஸ்மாக் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மனுதாரரின் வழக்கை விசாரிக்கக்கூடாது என வாதிடப்பட்டது.

ஆனால் அதனை நிராகரித்த நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கும் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள உத்தரவு இந்த மனுவுக்கும் பொருந்தும் என சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி அமைத்தது.   இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறப்பது தொடர்பான முந்தைய மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற சூழலில் போனிபேஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது நீதிமன்ற விதிகளின் வரம்பை மீறிய செயல் என்பதால் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என தெரியவருகிறது.  இதற்கிடையில், டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு வரும்போது எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் எந்த புதிய உத்தரவையும் பிறப்பிக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories: