கொரோனா ஊரடங்கு உத்தரவால் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.200 கோடி மதிப்பிலான பட்டுசேலைகள் தேக்கம்

* 50 ஆயிரம் நெசவாளர் குடும்பங்கள் வேலையின்றி தவிப்பு

* அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென எதிர்பார்ப்பு

ஆரணி: கொரோனா ஊரடங்கு உத்தரவால் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் ₹200 கோடி மதிப்பிலான பட்டு சேலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. இதனால் 50 ஆயிரம் நெசவாளர் குடும்பங்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும் என்று தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. உலகையே உலுக்கி வரும் கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது வரும் 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் பட்டு நெசவுத்தொழிலில் பாரம்பரியமிக்க கைத்தறி பட்டு உற்பத்தி செய்யப்படுவது திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தான். ஆரணி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருது பராம்பரியமிக்க கைத்தறி பட்டு சேலை தான். தமிழகத்தின் பட்டு மையங்களில் பலவும் நொடித்துப் போய்விட்ட நிலையிலும், ஆரணியில் பல ஆயிரம் குடும்பங்களின் முதுகெலும்பாக விளங்கி வருது கைத்தறிப் பட்டு நெசவு தொழில்தான்.

ஆரணி வட்டாரத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகள் தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து ஆரணிக்கு நேரடியாக வந்து பட்டுச் சேலைகளைக் வியாபாரிகள் மொத்தமாக வங்கி செல்லும் அளவுக்கு  புகழ்பெற்றுள்ளது. உலக அளவில் பட்டு உற்பத்தி மையங்களின் வரிசையில் ஆரணி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் நெசவுத் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள், ஆட்கள் பற்றாக்குறை போன்றவை இருந்தாலும், இளம் பெண்கள் முதல் மூதாட்டிகள் வரையில் அனைவரையும் கவர்ந்த வகையில் நுணுக்கமான முறையில் கம்ப்யூட்டர் டிசைன்களைக்  கொண்டு கைத்தறி பட்டுசேலைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு ஆரணி பட்டு தொழிலுக்கு உண்டு. இந்நிலையில் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பட்டு சேலைகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டு மாவட்டத்தில் சில கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட கடைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரணி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டு சேலைகள் விற்பனை செய்ய முடியாமலும், மூலப்பொருட்கள் வாங்கவும், உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாமலும் ஆயிரக்கணக்கான பட்டுசேலைகள் தேக்கமடைந்து. இதனால் பட்டு சேலைகள் உற்பத்தி செய்ய முடியாமல் பட்டு நெசவு உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ஆரணி பகுதியில் பட்டுசேலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஆரணி டவுன், கொசப்பாளையம், தைாப்பேட்டை, முள்ளிப்பட்டு, சேவூர், எஸ்.வி.நகரம், குண்ணத்தூர், மாமண்டூர், தேவிகாபுரம், ஒண்ணுபுரம், அரையாளம், முனுக்கப்பட்டு, அத்திமலைப்பட்டு, இரும்பேடு, மெய்யூர், துருவம், முனுக்கப்பட்டு, மேல்சீசமங்கலம், மேல்நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கைத்தறி நெசவுதான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து பாதிப்பால் ஆரணி பகுதிகளில் உற்பத்தியாகும் பட்டு சேலைகள் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களான பெங்களூர், பாண்டிச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், உலக நாடுகளுக்கும் பட்டு சேலைகள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் 50 ஆயிரம் நெசவு தொழிலாளர்கள் உற்பத்தி பல ஆயிரக்கணக்கான பட்டு சேலைகள் ஏற்றுமதி மற்றும் விற்பனை செய்ய முடியாமல் இருந்து வருகிறது.

இதனால் சுமார் ₹200 கோடி மதிப்பிலான பட்டு சோலைகள் விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாக ஆரணி வட்டாரத்தில் பட்டு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் பட்டு சேலை உற்பத்தியாளர்கள், பட்டு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. உணவு உண்பதற்கு தேவையான மளிகை, காய்கறி பொருட்களை வாங்கவும் முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

எனவே தமிழக அரசு தினக்கூலிகள், விவசாயக்கூலிகள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியது போல்  கைத்தறி மற்றும் பட்டுசேலை உற்பத்தி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று பட்டு நெசவு உற்பத்தி தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெசவாளர்களுக்கு நிவாரணம்

ஊரடங்கால் பட்டு  உற்பத்தியாளர்கள், நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இயல்பு  நிலை திரும்ப 6 மாதங்களுக்கும் மேல் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே,  இத்தகைய இக்கட்டான சூழல் சரியாகும் வரை அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை  வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமண பட்டுச்சேலைகள் ஆர்டர் இல்லாமல் பல கோடி இழப்பு

கடந்த  சில மாதங்களாகவே பட்டுச்சேலை விற்பனை நலிவடைந்திருந்தது. இதனால் உற்பத்தி  செய்யப்பட்ட சேலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. அதோடு கடந்த இரண்டு  மாதங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக திருமணங்கள், சுபநிகழ்ச்சிகள் குறைந்து  போயின. இதனால் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து  லட்சக்கணக்கில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கான பட்டுச்சேலைகள்,  பட்டு வேட்டிகளுக்கான வழக்கமான ஆர்டர்கள் கிடைக்கவில்லை. ஆர்டர்கள்  கிடைக்காததால் பட்டுச்சேலை, பட்டு வேட்டிக்கான விற்பனை அடியோடு முடங்கி  போனது. இதனால்  போட்ட முதலீட்டை எடுக்க முடியாமல், உற்பத்தியையும் செய்ய  முடியாமல் நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர்.

ஜவுளி கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும்

ஆரணியில் உற்பத்தியாகும் பட்டுச்சேலைகளுக்கு தேவையான ஜரிகை, உட்பட  மூலப்பொருட்கள் சூரத், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து  இறக்குமதியாகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் அமெரிக்கா,  இங்கிலாந்து, சிங்கப்பூர், பிரான்சு, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், மலேசியா  என வெளிநாடுகளுக்கும், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஆந்திரம், கர்நாடகம்  என வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கால்  போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதனால் ஆண்டுக்கு ₹1000 கோடிக்கும் மேல்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரணி பகுதிகளில் பட்டு நிறுவனங்களில்  தேக்கமடைந்துள்ள சேலைகள் கொண்டு செல்ல போக்குவரத்து அனுமதிக்கப்பட  வேண்டும். ஊரடங்கு தளர்வில் கடைகள் திறக்க அனுமதித்தது போல் ஜவுளி கடைகள்  திறக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: