மாவட்டங்களில் முதல் நாளே பேக்கிங் செய்து மறுநாள் சென்னைக்கு ஆவின் பால் விநியோகிப்பதால் கெட்டுப்போகிறது: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை: வெளி மாவட்டங்களில் இருந்து முதல் நாளே பேக்கிங் செய்து சென்னைக்கு ஆவின் பால் விநியோகம் செய்யப்படுவதால் விரைவில் கெட்டுப் போவதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.  இது குறித்து வெளியிட்ட அறிக்கை: சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை என தமிழக அரசிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக பொய் மேல், பொய் பேசி உண்மைக்குப் புறம்பான தகவல்களை கூறி வரும் ஆவின் நிர்வாக இயக்குனருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் கடந்த ஒரு வார காலமாக தட்டுப்பாடகவே ஆவின் பால் விநியோகம் செய்து வரும் சூழ்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆவின் சமன்படுத்தப்பட்ட பால் விநியோகம் செய்யப்படவில்லை.

மேலும் மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் இருந்து மறுநாள் தேதியிட்டு முதல் நாளே பேக்கிங் செய்து சென்னைக்கு ஆவின் பால் விநியோகம் செய்யப்படுவதால் விரைவில் கெட்டுப் போகிறது. ஆனால் அதற்கான இழப்பீடுகள் பால் முகவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம் பால் முகவர்களுக்கு ஒரு நியாயமா? தேவைப்பட்டால் ஆதாரங்களையும் வெளியிடுவோம். மேலும் ஆவின் பால் தட்டுப்பாடாக விநியோகம் செய்யப்பட்டாலும் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் பணிகளை பால் முகவர்கள் செய்து வருகின்றனர். இவ்வாறு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: