ஹைதராபாத் : ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலையில் நள்ளிரவில் மீண்டும் வாயு கசிவு வெளியேறியதால் 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருக்கும், தென் கொரிய ரசாயன தொழிற்சாலையிலிருந்து,நேற்று அதிகாலை ஸ்டைரீன் என்ற விஷவாயு கசிந்தது. இந்த விஷவாயு ஆர்.ஆர்.வெங்கடாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டி, காற்றில் வேகமாகப் பரவியது. சுமார் 3 கிலோ மீட்டர் துாரம் பரவிய இந்த விஷவாயுவால் ஐந்து கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள், மூச்சுத் திணறல், கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். 11 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.