கொரோனாவை வேண்டுமென்றே பரப்பி, உயிரிழப்பை ஏற்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனை : அவசர சட்டத்தை கொண்டு வந்தது உத்தரப் பிரதேச அரசு

லக்னோ : கொரோனாவை வேண்டுமென்றே பரப்பி, உயிரிழப்பை ஏற்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டத்தை உத்தரப் பிரதேச அரசு கொண்டுவந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பலர் தொற்று ஏற்பட்டதை மறைத்து பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தியதால் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த புதிய அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, சட்ட வரைவு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கொரோனா பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உ.பி.  தொற்று நோய் கட்டுப்பாட்டு சட்டம் 2020  என்ற புதிய சட்டம் இயற்றப்படுகிறது. அதன்படி,

*இந்த சட்டத்தின்கீழ், வேண்டுமென்றே பிறருக்கு கொரோனா பரப்பி, அதில் அந்த நபர் உயிரிழந்தால், அக்குற்றத்தை செய்வோருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை முதல் ஆயுள் தண்டனை வரையும், 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

*தெரிந்தே கொரோனா பரப்புதலில் ஈடுபடுவோருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறையும், 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

*கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர் மீது எச்சில் துப்புதல், குப்பை எறிதல் போன்ற செயலை செய்வோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறையும், 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

*கொரோனா தொற்று ஏற்பட்டதை மறைத்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், 3 வருடம் வரை சிறைத்தண்டனையும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

*அதே போன்று நோய் தடுப்புக் காவலில் இருந்து தப்பிச் செல்பவர்களுக்கு ஒரு வருடம் முதல் 3 வருடங்கள் வரை சிறையோ, 50000 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதமோ விதிக்கப்படும் எனவும் அவசரச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

*மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கொரோனா பணியாளர்களைத் தாக்கினால் அவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை  மற்றும் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட அவசர சட்டத்திற்கு தற்போது மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் ஆளுநரின் ஒப்புதல் பெற்று சட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: