தடுப்பு நடவடிக்கையிலும் கேரளா அசத்தல் டாக்சிகளில் டிரைவர்களுக்கு பின்புறம் கண்ணாடி தடுப்பு: எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் அதிரடி

கொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் டாக்சி சேவைகள் தொடங்கியுள்ள நிலையில் ஓட்டுனர் இருக்கைக்கு பின் கண்ணாடி தடுப்புக்களை அமைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.  கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் எதிரொலியாக ஆன்லைன் டாக்சி சேவைகளான உபேர், ஓலா உள்பட அனைத்து டாக்சி சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், மத்திய அரசு சார்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் டாக்சிகள் இயக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுனர் மற்றும் இரண்டு பயணிகளுடன் டாக்சிகளை இயக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில், ‘‘பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட டாக்சி ஓட்டுனர்களுக்கு நலவாரியம் மூலமாக ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகின்றது” என்றார். இந்நிலையில் எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு நடுவே பைபர் கண்ணாடியால் தடுப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோய் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக ஓட்டுனர், பயணிகள் இடையே இதுபோன்ற தடுப்புக்களை கண்டிப்பாக அமைக்க வேண்டும் என்றும் மாவட்ட தெரிவித்துள்ளது.

ஆனால் கூடுதல் செலவாகும் என்பதால் சில ஓட்டுனர்கள் மாவட்ட நிர்வாகத்தின் இந்த ஆலோசனையை ஏற்க மறுத்தாலும், பலர் இது தங்களுக்கும் பாதுகாப்பானது என்று கருத்து தெரிவித்துள்ளனர். டாக்சிகளில் ஒரு ஓட்டுனர், 2 பயணிகளை மட்டும் ஏற்றி செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் டாக்சிகள் எத்தனை முறை பயணிக்கலாம் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. ஆனால் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் பயணிகள் வருவது கஷ்டம் என டாக்சி ஓட்டுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories: