பாக். கிரிக்கெட் வாரியம் என்னைக் காப்பாற்றவில்லை...முகமது ஆசிப் புலம்பல்

இஸ்லாமாபாத்: எனக்கு முன்பும் எனக்கு பின்பும் பல வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கினாலும் அவர்களுக்கு 2வது வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) என்னைக் காப்பாற்றவில்லை என்று சூதாட்ட புகாரில் தண்டனைக்கு உள்ளான முகமது ஆசிப் தெரிவித்தார்.  பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப் (37). இவர் 22 டெஸ்டில் 105 விக்கெட், 58 ஒருநாள் போட்டியில் 46 விக்கெட், 11 டி20ல் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 2010ல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவருடன் சல்மான் பட், முகமது ஆமிர் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. மேலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் இங்கிலாந்தில் ஓராண்டு சிறை தண்டனையும் அனுபவித்தார்.

அதன்பிறகு இவர் மீதான தண்டனைகளை ஐசிசி 2015ல் ரத்து செய்ததுடன், விளையாடவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அவரால் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்ப முடியவில்லை. உள்ளூர் போட்டிகளிலும் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. தொழிற்சாலை  அணிக்காக மட்டுமே அவரால் விளையாட முடிந்தது. சூதாட்டத்தில் மட்டுமல்ல போதை பொருள் பயன்படுத்தியதற்காக 2006ல் இவருக்கு பிசிபி ஓராண்டு தடை விதித்தது. அதே போதைப்பொருள் பிரச்சினைக்காக 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

இங்கிலாந்து சிறையில் இருந்து விடுதலையான நாளையொட்டி (2012, மே 3) அளித்த பேட்டியில் முகமது ஆசிப் கூறியதாவது: எனக்கு முன்பும் எனக்கு பின்பும் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தண்டனை கிடைத்தாலும் 2வது வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அவர்கள் அணிக்கு திரும்பினர். ஆனால் பிசிபி எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. என்னால் மீண்டும் கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. என்னைப் போல் தவறு செய்தவர்கள் பலர் இன்று பிசிபி உடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சிறந்த பவுலர், பேட்ஸ்மேனாக உலகம் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறது. அவர்கள் என்னைப் பற்றி இன்னும் பேசுகிறார்கள்.

கிரிக்கெட் உலகில் நான் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறேன் என்று சற்று யோசித்துப் பாருங்கள். அதுதான் எனக்கு இன்றும் பெருமை சேர்க்கிறது.

அம்லா  போன்ற ஜாம்பவான்கள் என்னைப் பற்றி பேசுவதற்கு காரணம் இருக்கிறது. அது எனக்கு பெருமகிழ்ச்சி தருகிறது. எப்படி இருந்தாலும் களத்தில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன். இப்போதும் டெஸ்ட் அணிக்கு திரும்ப விரும்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக விளையாடுவேன். இவ்வாறு முகமது ஆசிப் கூறினார்.

Related Stories: