சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டத்தில் இருந்து தேனிக்கு சரக்கு லாரிகளில் வந்து சேரும் பொதுமக்கள்: கொரோனா அச்சத்தினால் இடம்பெயர்வது அதிகரிப்பு

தேவாரம்: சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் வசிப்பவர்கள் கொரோனா அச்சத்தினால் தேனிக்கு வருவது அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் 43 பேருக்கு கொேரானா அறிகுறி இருப்பதாக ஸ்வாப்டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதன்பின்பு தேனி க.விலக்கு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இருந்து இதுவரை 38 பேர் குணமாகி வீடுகளுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் ஊரடங்கு மே.3ந் தேதி வரை இருக்கும் நிலையில் மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வேலை செய்யக்கூடிய தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். குறிப்பாக சரக்கு லாரிகள், காய்கறி லாரிகள், தேங்காய் ஏற்றி செல்லும் லாரிகள் போன்றவற்றில் ஏறி சொந்த ஊர்களுக்கு மறைமுகமாக வருகின்றனர். விவசாய பொருட்களை மறிக்ககூடாது என கூறப்பட்டுள்ளதால் செக்போஸ்ட்களில் பணியாற்றக்கூடிய போலீசாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் கடந்த சில தினங்களில் மாவட்டம் முழுவதும் அதிகளவில் வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இம்மாவட்டத்திற்கு படையெடுத்துள்ளனர்.

குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் குடியிருப்பவர்கள் அதிகளவில் வருவதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட எல்லை அமைந்துள்ள செக்போஸ்ட்களில் அதிகமான பாதுகாப்பை மேற்கொள்ளவேண்டும். வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் போய் இன்று நமது மாநிலத்திற்குள்ளேயே பணியாற்றக்கூடியவர்கள் வருவது அதிகரித்து இருப்பது கவலையை உண்டாக்கி உள்ளது. எனவே சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் இணைந்து வருபவர்களின் பட்டியலை எடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் ஆபத்துக்கள் தேனியை நோக்கி திரும்பிட வாய்ப்புகள் உள்ளன. கொரோனா டெஸ்ட் கட்டாயம் என்பதால் இதனை உடனடியாக மாவட்ட எல்லைகளிலேயே செய்வதற்கும், உரிய முகவரியை பெறுவதற்கும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

எல்லைகளில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்

தேனி மாவட்டத்தில் கடந்த 12 நாட்களில் எந்த கொரோனா நோய் தொற்றும் இல்லை. எனவே இதனை சிகப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கொரோனா விரைவாக பரவக்கூடிய சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருப்பவர்கள் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் இம்மாவட்டத்திற்கு இடம்பெயர்வதை கண்காணிக்க எல்லைகளில் தீவிர கண்காணிப்பை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும். சென்னையில் பணியாற்றுபவர்கள் அச்சம் காரணமாகவும் இடம்பெயர்ந்து வருகிறார்கள்.

Related Stories: