ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களை புறக்கணித்தால் பேரழிவு: பிரதமருக்கு சோனியா கடிதம்

புதுடெல்லி: ‘‘ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும். அதை புறக்கணித்தால், இப்பிரச்னை நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தும்’’ என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். கொரோனா ஊரடங்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கால் இத்துறை ஒவ்வொரு நாளும் ரூ.30,000 கோடி இழப்பை சந்தித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் இத்துறையை இக்கட்டான நிலையில் இருந்து மீட்பது அவசியமாகும். எனவே, சிறு, குறு தொழில்துறையை பாதுகாக்க பிரதமர் மோடி ரூ.1 லட்சம் கோடி நிதி உதவியை அறிவிக்க வேண்டும். அதே அளவு தொகையை கடன் உத்தரவாத நிதியாக வழங்குவதாக உறுதி அளிக்க வேண்டும்.. இதை புறக்கணித்தால், இப்பிரச்னை நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை விளைவிக்கும். எனவே அதில் தலையிட்டு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: