மும்பை, புனே பெருநகர பிராந்தியத்தில் ஜூன் வரை ஊரடங்கு நீட்டிப்பு?: மகாராஷ்டிரா அரசு பரிசீலனை: ரயில், பஸ்கள் இயக்கப்படாது

மும்பை: மும்பை மற்றும் புனே பெருநகர பிராந்தியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இவ்விரு பெருநகர பிராந்தியங்களில் மட்டும் ஜூன் மாதம் வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் சுமார் 90 சதவீதம் பேர் மும்பை மற்றும் புனே பெருநகர பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசும், மாநகராட்சி நிர்வாகங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதிலும் இந்த பிராந்தியங்களில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

இதனால், மே 3ம் தேதிக்கு பிறகும் மும்பை மற்றும் புனே பெருநகர பிராந்தியங்களில் ஜூன் மாதம் வரை ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். அவர் கூறுகையில், ‘‘மும்பை மற்றும் புனே பெருநகர பிராந்தியங்களில் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மே 3ம் தேதிக்கு பிறகு உடனடியாக ஊரடங்கு உத்தரவை விலக்கிக் கொள்ளும் திட்டமில்லை. ஜூன் மாதம் வரை ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. ரயில், பஸ் போக்குவரத்துகளுக்கு தொடர்ந்து தடை விதிப்பதுடன், கடைகள் மற்றும் இதர வர்த்தக நிலையங்கள் செயல்படவும் தடை விதித்து ஜூன் மாதம் வரை ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது’’ என்றார்.

மும்பை மற்றும் புனே பெருநகர பிராந்தியங்கள்தான் மகாராஷ்டிரா மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கி வருகின்றன. இந்த பிராந்தியங்களில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதும், அனைத்து வர்த்தகமும் முடங்கி போயிருப்பதும் மாநில அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: