பல்வேறு துறைகளின் நடவடிக்கையால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவரும் ஈரோடு மாவட்டம்: அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு

ஈரோடு: ஈரோடு  மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகளின் தொடர் கூட்டு நடவடிக்கையால் கொரோனா  பாதிப்பில் இருந்து ஈரோடு மாவட்டம் படிப்படியாக மீண்டு வருகிறது. இதற்கு  பொதுமக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில்  கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 16ம்  தேதி கோவை விமான நிலையத்தில் இருந்து ஈரோடு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவருடன் வந்த நபர்கள் குறித்து  விசாரித்தபோது அவர்களில் 5 பேர் ஈரோடு அருகே கொல்லம்பாளையம் பகுதியில்  இருப்பதாக கண்டறியப்பட்டது. அன்று இரவே 5 பேரையும் சுகாதாரத்துறையினர்  பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதன் பின்னர் உஷாரான ஈரோடு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை துவங்கியது.  ஈரோடு மாநகர பகுதிகளில் கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை, புதுமஜீத் வீதி,  கொங்காலம்மன் கோவில் வீதி, பெரியஅக்ரஹாரம், சாஸ்திரிநகர், ரயில்வே காலனி,  மாணிக்கம்பாளையம், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டு அங்கிருந்த  மக்கள்  தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், மாவட்டத்தில் எந்தெந்த  இடங்களில் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதை கண்டறிந்தனர். அதன்படி,  மாவட்டத்தில் கோபி, கவுந்தப்பாடி, பெருந்துறை, சத்தியமங்கலம், லக்கம்பட்டி, நம்பியூர் உள்ளிட்ட 18 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த பகுதிகளை  சேர்ந்த 32,435 குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 135 பேர் தனிமைப்படுத்தப்பட்டடனர்.   அங்கு உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த  பணியாளர்களை கொண்டு அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்கப்பட்டது.

மாநகராட்சி பகுதிகளில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பு பணிகளில்  ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் காவல்துறையின்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. எஸ்பி சக்திகணேசன் தலைமையின் கீழ்  ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வீட்டை  விட்டு மக்கள் வெளியே வரக்கூடாது என ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். ஈரோடு மாநகராட்சி  பகுதிகளில் ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனால், ஆரம்பத்தில் கொரோனா தொற்று பரவலில் மத்திய அரசு அறிவித்த சிவப்பு பகுதியில் தமிழகத்தில் 3 மாவட்டங்கள் இடம் பெற்றது. அதில், ஈரோடு மாவட்டமும் ஒன்று.

இதனால், மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஊரடங்கால் மக்களின் நடமாட்டம் குறைந்த  நிலையில் கொரோனா பாதிப்பும் குறைய தொடங்கியது. பெருந்துறையில் உள்ள அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 70 பேரில் 65 பேர்  முழுமையாக குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதில், ஒருவர் இறந்து போன  நிலையில் 4 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மே 3ம்தேதிக்கு  பிறகே இந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. கொரோனா பரவ  துவங்கிய உடனேயே அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை,  மாநகராட்சி ஆகிய நிர்வாகங்கள் இணைந்து செயல்படுத்த தொடங்கினர். இதனால், தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் 2வது இடத்தில் இருந்த ஈரோடு மாவட்டம்  படிப்படியாக அதில் இருந்து மீண்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும், சமூக  ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: