கொரோனாவால் கேரளா செல்வது நின்றது விலை இல்லாததால் வயலிலேயே வாடும் சாம்பார் வெள்ளரி: நெல்லை, தூத்துக்குடி விவசாயிகள் கவலை

நெல்லை: நெல்லை அருகே சாம்பார் வெள்ளரிக்கு விலை கிடைக்காததாலும் ஊரடங்கு காரணமாக கேரளாவுக்கு செல்வது குறைந்ததாலும் வயலிலேயே பழுத்து அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாம்பார் வெள்ளரி எனப்படும் பெரிய அளவிலான வெள்ளரிக்காயை ஏராளமான விவசாயிகள் பல ஏக்கர் அளவிற்கு பயிரிடுகின்றனர். இவற்றிற்கு தமிழகத்தை விட கேரளாவில் அதிக மவுசு உள்ளது. கேரள மாநில மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக சாம்பார் வெள்ளரி உள்ளது. இதனால் தமிழகத்தின் தேவையை விட கேரளாவின் தேவையை கருத்தில் கொண்டும், இதற்கு அதிக தண்ணீர் தேவை இல்லை என்பதாலும் விரைவாக காய்த்து பலன் தரக்கூடியது என்பதாலும் இதனை விவசாயிகள் விரும்பி பயிரிடுகின்றனர்.

நெல்லை நயினார்குளம், பாவூர்சத்திரம் மொத்த காய்கனி விற்பனை சந்தைகளில் இருந்து தினமும் அதிக அளவில் வாகனங்களில் செல்லும் காய்கனி

களில் சாம்பார் வெள்ளரி முக்கிய பங்கு வகிக்கிறது. இதை நம்பி வழக்கம் போல் விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டிருந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இதன் நுகர்வு குறைந்துவிட்டது. குறிப்பாக கேரளாவிற்கு காய்கறிகள் கொண்டு செல்வது நின்று விட்டது. இதனால் உள் மாவட்ட சந்தைகளுக்கு மட்டும் விற்க வேண்டிய நிலை உள்ளது. இங்கும் குறைந்த விலைக்குகூட வாங்க வியாபாரிகள் முன்வருவதில்லை. இதனால் இந்த வெள்ளரியை பயிரிட்ட விவசாயிகள் கட ந்த சில வாரங்களாக மனஉளைச்சலில் உள்ளனர். ஒரு கிலோ 2 ரூபாய்க்கு கூட வாங்க வியாபாரிகள் முன்வராததால் சாம்பார் வெள்ளரியை வயலில் இருந்து பறிக்காமல் விவசாயிகள் விட்டுள்ளனர்.

வல்லநாடு அருகே சிங்கத்தாகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பறிக்கப்படாத சாம்பார் வெள்ளரி வயலில் பழமாக மாறி அழுகுகின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அரசு தடை உத்தரவை விலக்கினால் மட்டுமே எங்கள் விவசாயம் ஓரளவு பிழைக்கும். இதனை இலவசமாக கொடுத்தால் கூட யாரும் வாங்க முன்வருவதில்லை. பறிக்கும் கூலியாவது மிஞ்சும் என்பதால் விலைபோகாத சாம்பார் வெள்ளரியை பறிக்காமல் விட்டுவிட்டோம். தற்போது முதலுக்கே மோசம் வந்துள்ளது என்றனர்.

Related Stories: