கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட துவங்கியது: சமூக விலகலுடன் தொழிலாளர்கள் பணியாற்றினர்

கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் நேற்று முதல் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் செயல்பட துவங்கியது. தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணியாற்றுகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ம்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து தவித்து வந்தனர்.இந்நிலையில் கொரோனோ தொற்று பரவாத இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளை இயக்க அந்தந்த மாநில அரசுகளே முடிவுகளை எடுத்துக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து தீப்பெட்டி தொழிற்சாலைகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுழற்சி முறையில் பணியாற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதன்படி கோவில்பட்டி பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள், தீக்குச்சி தொழிற்சாலைகள், மருந்து முக்கிய குச்சிகளை பெட்டிகளில் அடைக்கும் நிறுவனங்கள் போன்றவைகள் நேற்று முதல் செயல்பட துவங்கியது. தொழிலாளர்கள் அரசின் விதிகளின் படி முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் சமூக இடைவெளி விட்டு பணியாற்றுகிறார்களா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொழிலாளர்களை வீடுகளில் இருந்து ஆலைக்கு அழைத்து வரவும், வேலை முடிந்த பின்னர் வீடுகளில் கொண்டு விடவும் வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக வேலைவாய்ப்பின்றி தவித்த தொழிலாளர்கள் மீண்டும் ஆலைகள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: