கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த டாக்டர் சைமன் மனைவியிடம் தொலைபேசி மூலம் முதல்வர் ஆறுதல்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த டாக்டர் சைமன் மனைவி ஆனந்தி சைமனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் எடப்பாடி ஆறுதல் கூறினார். சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நியூ ஹோப் மருத்துவமனையை நடத்தி வந்தவர் டாக்டர் சைமன் ஹெர்குலஸ். இவர், சமீபத்தில் அந்த மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளை பரிசோதித்ததில் கொரோனாவால் பாதித்துள்ளார். இதையடுத்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன் உயிரிழந்தார்.இதையடுத்து அவரது உடலை முழு பாதுகாப்புடன் அடக்க செய்ய குடும்பத்தினர் மற்றும் டாக்டர்கள் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேலங்காடு சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அங்கும் பொதுமக்கள் திரண்டு கற்களையும், கம்புகளையும் தூக்கி வீசினர் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உயிரிழந்த டாக்டர் சைமனின் மனைவி ஆனந்தியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “இன்று (22ம் தேதி) சுமார் 12.30 மணியளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் சைமன் மனைவி ஆனந்தி சைமனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். அவர்களது மகன் மற்றும் மகள் ஆகியோரின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்து பேசிய டாக்டர் சைமனின் மனைவி, “என் கணவர் சைமனின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்க செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: