தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் தனியார் தொழிற்சாலைகளை திறக்க உரிமையாளர்கள் தயக்கம்: புதுவை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி

புதுச்சேரி: புதுவையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தமிழகத்தை ஒட்டியுள்ள  பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளை திறக்க அதிகாரிகள் பல்வேறு  கிடுக்கிப்பிடி உத்தரவுகளை போட்டுள்ளதால் உரிமையாளர்கள் தயக்கம் காட்டி  வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி  நேற்று முதல் நிபந்தனைகளுடன் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.   இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்,  புதுச்சேரியை ஒட்டிய தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில்  கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருவதால் நோய் பரவலை தடுக்க இங்கு ஊரடங்கு  தளர்வை திரும்ப பெற வேண்டுமென முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரியை ஒட்டியுள்ள தொழிற்பேட்டை பகுதிகளான திருபுவனை,  சேதராப்பட்டு, திருவண்டார் கோயில், மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட  தொழிற்பேட்டை பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகள் நேற்று முதல் மீண்டும்  செயல்பட தொடங்கியுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி  சில நெறிமுறைகளை அவர்கள் கடைபிடிப்பதை தொழிற்துறை உறுதி செய்து அவர்களுக்கு  அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் இந்த  தொழிற்சாலைகளுக்கு புதுச்சேரியை மட்டுமின்றி அண்டை மாநிலமான தமிழக  பகுதிகளில் இருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றிய  நிலையில் தற்போது தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு அமலில் இருப்பதால் அவர்கள்  இங்கு வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 இதனால் சில தனியார்  கம்பெனிகளை திறக்க அதன் உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.  இருமாநில அரசுகளின் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் நிறுவனத்தை  திறந்து இயக்கினாலும் உற்பத்தி  செய்யப்படும் பொருட்களை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை இருப்பதாலும்  குழப்பத்தில் உள்ளனர். இதனிடையே மீண்டும் கம்பெனிகளை திறக்கப்போவதாக  மாநில தொழில் துறையிடம் விண்ணப்பித்துள்ள நிறுவனங்களில் இயக்குனர்  தலைமையில் அதிகாரிகள் சென்று கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான  பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். விதிமுறைகளை முழுமையாக  கடைபிடிப்பதோடு எந்தவித பிரச்னையும் இல்லாத நிறுவனங்களுக்கு மட்டுமே  தற்போதைக்கு அனுமதி வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: