தமிழக - கேரள எல்லை வனப்பாதையில் மக்கள் நடமாட்டமா?.. கேரள அமைச்சர் ஆய்வு

கம்பம்: ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், தமிழக - கேரள எல்லை வனப்பாதைகளில் பொதுமக்கள் சென்று வருவதாக எழுந்து புகாரையடுத்து, வனப்பாதைகளில் கேரள அமைச்சர் எம்.எம்.மானி நேற்று ஆய்வு செய்தார். தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டம், கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு சாலைகள் வழியாக கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்திற்கு சென்று வரலாம். இதுதவிர கம்பம்மெட்டு, ராமக்கல்மெட்டு ஆகிய பகுதிகளுக்கு செல்ல வனப்பாதைகளும் உண்டு. கொரோனா பரவலை தடுக்க, மாநில சாலைப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதிக்கப்படுகிறது.

தற்போது கேரளாவில் கொரோனா தொற்று குறைந்ததால் இடுக்கி, கோட்டயம் மாவட்டத்தில் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. இருப்பினும், தமிழகத்திலிருந்து கேரளாவுக்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தமிழகத்திலிருந்து வனப்பகுதி வழியாக கேரளாவுக்கு 20 பேர் கடக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மானி நேற்று எல்லைப்பகுதிகளான கம்பம்மெட்டு, ராமக்கல்மெட்டு மற்றும் தேவாரம்மெட்டு ஆகிய பகுதிகளுக்குச் சென்று வனப்பாதைகளை ஆய்வு செய்தார்.

இதுகுறித்து கேரள அமைச்சர் எம்.எம்.மானி கூறுகையில், ‘‘தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அடுத்து வரவிருக்கும் நாட்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகத்திலிருந்து வனப்பகுதி வழியாக யார் வந்தாலும், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதேபோல, கேரளாவிலிருந்து யாரையும் தற்சமயம் கேரளாவுக்கு அனுப்ப மாட்டோம்’’ என்றார்.

Related Stories: