கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தால்தான் விமான சேவை: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே விமான சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஊடரங்கு அமலில் உள்ளது. வரும் மே 3ம் தேதி வரை இந்த ஊடரங்கு அமலில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வரும் மே 4ம் தேதி முதல் விமான போக்குவரத்து தொடங்கும் எனவும் அதற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, மே 3ம்தேதி ஊடரங்கு தளர்த்தப்பட்டாலும்கூட, இந்தியாவில் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர்தான்  விமான சேவை தொடங்க அனுமதிக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:இந்தியாவில் கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட பின்பு, கொரோனாவால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்கிற சூழ்நிலை உருவான பிறகுதான் விமான போக்குவரத்து சேவை தொடர்பாக அதன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். சில விமான நிறுவனங்கள் மே 3ம் தேதி முதல் விமான சேவைக்கு டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. அவர்களிடம் கடந்த 19ம் தேதியே டிக்கெட் முன்பதிவுகளை நிறுத்துமாறு  வலியுறுத்தியுள்ளோம். விமான நிறுவனங்களுக்கு, விமான சேவையை தொடங்குவது பற்றி முன்கூட்டியே மத்திய அரசு தெளிவுப்படுத்தும். டிக்கெட் முன்பதிவுகளுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும், ஊடரங்கு அறிவிப்புக்கு முன் விமான டிக்கெட்களை முன்பதிவு செய்தவர்களுக்கு சில விமான நிறுவனங்கள் டிக்கெட்டை ரத்து செய்தது தொடர்பாக இழப்பீடுகளை இன்னமும் வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டை மக்கள் முன்வைத்து வருகின்றனர். தற்போது, உள்நாடு மற்றும் சர்வதேச  விமான சேவை கார்கோ (பொருட்களை ஏற்றி செல்ல) சேவைக்காக மட்டுமே  அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: