நெல்லைக்கு முதற்கட்டமாக ஆயிரம் கிட் ஒதுக்கீடு: மேலப்பாளையத்தில் ரேபிட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை துவக்கம்

நெல்லை: நெல்லையில் ரேபிட் கிட் கருவி மூலம் கொரோனா விரைவு பரிசோதனை நேற்று துவங்கியது. மேலப்பாளையத்தில் சோதனையை கலெக்டர் ஷில்பா துவக்கி வைத்தார்.கொரோனாவை உடனடியாக கண்டறிய உதவும் ரேபிட் கிட் கருவியை சீனாவிலிருந்து கொள்முதல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தனர். இதன்படி சீனாவில் இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்த 5 லட்சம் ரேபிட் கிட் விரைவு பரிசோதனை கருவிகளில் 12 ஆயிரத்தை தமிழகத்துக்கு அனுப்பியது. சீனாவிலிருந்து தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்த 24 ஆயிரம் கருவிகளும் சென்னை வந்தன. இந்த கருவிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பரிசோதனையில் 30 நிமிடங்களில் முடிவுகள் தெரிய வரும். கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிவதற்கான ரேபிட் கிட் கருவி பரிசோதனை நேற்று முன்தினம் சேலத்தில் துவங்கியது. இதனையடுத்து நெல்லை மாவட்டத்திற்கு ஆயிரம் ரேபிட் கிட் பரிசோதனை கருவிகள் வந்தன.

இந்த கருவிகள் மூலம் நேற்று மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் கொரோனா பரிசோதனையை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று துவக்கி வைத்தும், மாநகராட்சி சுகாதார அதிகாரிகளிடம் ரேபிட் கிட் ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதனையடுத்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:

நெல்லை மாவட்டத்தில் முதன் முதலாக 36 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 170 பேரை தேடி கண்டறிந்து அவர்களுக்கு பரிசோனை நடத்தியதில் 20 பேருக்கு பாசிட்டிவ் என தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் வரை நெல்லை அரசு மருத்துவமனையில் 60 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 23க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளுக்கு சென்றாலும் ஒரு வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டும் அவர்கள் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்ல முடியாதவாறு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு நிறைவாக ஒரு பரிசோதனை நடத்திய பின்பே அவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்படுவர். இந்த ரேபிட் கிட் கருவியில் நெகடிவ் என வந்தால் அவர்களுக்கு மேற்படி வேறு பரிசோதனை தேவையில்லை. ஆனால் பாசிட்டிவ் என வந்தாலும் சம்பந்தப்பட்ட நபருக்கு நோய் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த நெல்லை அரசு மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனை அவருக்கு எடுக்கப்படும். அதிலும் அவருக்கு பாசிட்டிவ் என வந்தால் மட்டுமே நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். நெல்லை மாவட்டம் ரெட் அலர்ட்டில் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் களக்காடு, பத்தமடை, பேட்டை, டவுன் கோடீஸ்வரன்நகர், பாளை கேடிசிநகர், டார்லிங்நகர், கிருஷ்ணாபுரம், வள்ளியூர், மேலப்பாளையம் உள்ளிட்ட 9 இடங்கள் கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியிலுள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டும் வெளியே வர அனுமதிக்கப்படுவர். அப்பகுதியை சேர்ந்தவர்களை சுகாதார அலுவலர்கள் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருவர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் சதீஷ்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வரதராஜன், மேலப்பாளையம் சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது ஆகியோர் உடனிருந்தனர். இதனையடுத்து மேலப்பாளையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு ரேபிட் கிட் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories: