கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 31 பேர் வீடுகளுக்கு திரும்பினர்: மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு

சென்னை: கீழ்ப்பாக்கம் மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 31 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. இங்கு, டீன் வசந்தாமணி தலைமையில் டாக்டர்கள் குழுவினர் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 21 பேர் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு இவர்களில் 10 பேர் முழு குணமடைந்தனர். அதை தொடர்ந்து, நேற்று இவர்கள் 10 பேரும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ரோஷிணி அர்த்தர் தலைமையிலான மத்திய சுகாதாரத்துறை குழுவினர் 5 பேர் நேற்று ஆய்வு செய்தனர். தரமான கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறதா, நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்களா, டாக்டர்களும் பாதுகாப்பாக சிகிச்சை அளிக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்தனர். ஏற்கனவே, சென்னை ஓமந்தூரார் அரசினர் பன்நோக்கு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 30 பேர் நேற்று முன்தினம் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றும் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்த 21 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: