காக்கை கூட்டத்திடம் இருந்து மீட்கப்பட்ட வல்லூறு குஞ்சு : வனத்துறையிடம் ஒப்படைப்பு

குன்னூர்:குன்னூர் வனப்பகுதிகளில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வந்த கொண்டை வல்லூறு குஞ்சு ஒன்றை பெண் ஒருவர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.குன்னூர் அருகே தனியாருக்கு சொந்தமான உமரி காட்டேஜ் எனும் பகுதி உள்ளது. நேற்றுமுன்தினம் இப்பகுதியில் காக்கை கூட்டம் ஒரு பறவையை குஞ்சு ஒன்றை விரட்டி,விரட்டி கொத்தியதை அப்பகுதி பெண் ஒருவர் பார்த்துள்ளார். காக்கைகளை விரட்டிய அவர் கழுகு போன்றிருந்த அந்த பறவை குஞ்சினை மீட்டு வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார். பின்னர் நேற்று தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைக்க அதனை எடுத்து வந்தார். தீயணைப்பு துறையினர் வனத்துறைக்கு தகவல் அளிக்கவே, குன்னூர் வனத்துறையினர் நேரில் வந்து அதனை பெற்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கொண்டை வல்லூறு என்றழைக்கப்படும் இப்பறவை கழுகு இனத்தை சார்ந்தது. நீலகிரியில் உள்ள அடர்ந்து சோலைவனக்காடுகளில் வசிக்க கூடிய இதனை ஆங்கிலத்தில் க்ரிஸ்ட்டேட் குவோஸ்ஹாக் என்றழைப்பர். கூட்டை விட்டு வெளியேறி பறக்க முயற்சித்த வேளையில் காக்கை கூட்டத்திடம் சிக்கி உயிர் பிழைக்க வெகு தூரம் வந்திருக்கலாம். பிறந்து ஒரு மாதத்திற்குள் இருக்கும் என்பதால் இதனால் பறக்க முடியாத நிலையில் உள்ளது. மீண்டும் வனப்பகுதிகளில் விட்டால் பறக்க முடியாமல் விலங்குகளிடம் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே வனத்துறையினர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைப்பதாக தெரிவித்தனர்.

Related Stories: