ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த கபசுர குடிநீரை பயன்படுத்த தமிழகஅரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்: இம்காப்ஸ் நிறுவன தலைவர் பேட்டி

சென்னை: ஆயுஷ் அமைச்சகம்  வழிகாட்டுதலில் சித்தா மருந்துகளான கபசுரகுடிநீர், ஆடாதொடை மணப்பாகு  ஆயுர்வேதா, ஓமியோபதி மருந்துகளை மக்கள் பயன்படுத்த தமிழக அரசு  உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று இம்காப்ஸ் தலைவர் கண்ணன் கூறினார். சென்னை திருவான்மியூரில் உள்ள இம்காப்ஸ் நிறுவனத்தின் தலைவர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரசுக்கு சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துகளை பரிந்துரை செய்து தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளோம். இந்த மருந்துகளின் மூலம் கொடிய வைரசிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். சித்த மருத்துவத்தில் கைகளை கழுவ படிகார நீர் உள்ளது. கபசுரகுடிநீர், நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆடாதொடை மணப்பாகு போன்ற மருந்துகள் மத்திய அரசின் ஆயுஷ் துறையினரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதிமதுரம் சூரணம், தாளிசாதி சூரணம், பவளபற்பம், முத்துச்சிற்பி பற்பம் போன்ற மருந்துகள் கொரோனா வைரஸ் தொற்றால் வரக்கூடிய இருமல், மூக்கடைப்பு, தும்மல் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. கொரோனா வைரஸ் குறி குணங்களில் இருந்து விடுபட்டு உடலை தேற்ற நெல்லிக்காய் இளகம் மருந்து பயன்படுத்தலாம்.

ஆயுர்வேதத்தில் தசமூல கடுத்தரயாதி க்வாத சூரணம்-10 கிராம், யஷ்டி சூரணம்-5 கிராம் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 500 மிலி ஆக வந்த பிறகு ஒருநாள் முழுவதும் குடித்து வர வேண்டும். அகஸ்திய ரசாயனம், பில்வாதிகுடிகா, குடுச்சி சத்வம் ஆகிய மருந்துகளும் ஆயுஷ் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் சுதர்சன மாத்திரை, சுப்ரவடி மாத்திரை போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி தொற்று நோய் உள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

இதேபோன்று யுனானியில் ஷர்பத் சுவால் மருந்து இறுகிய கபத்தை அறுத்து சுலபமாக வெளியேற்றும். வறட்டு இருமலுக்கு லவூக் காத்தான் மற்றும் நாள்பட்ட இருமல், தொண்டையில் ஏற்படும் அழற்சி ஆகியவற்றுக்கு தவாஷிபா ஹலக் மருந்து பயன்படுத்தலாம்.கொரோனா வைரஸ் தற்காப்பு நடவடிக்கைக்காகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மத்திய அரசின் ஆயுஷ்துறை கபசுரகுடிநீரை பரிந்துரை செய்துள்ளது. இதில் 15 வகையான மூலிகைகள் சேர்க்கப்படுகிறது. இந்த 15 மூலிகைகள் ஒவ்வொன்றும் தனித்தனி செய்கை உடையவை.இவை அனைத்தும் ெகாரோனா வைரஸ் தொற்றால் வரக்கூடிய குறி குணங்கள் அனைத்திற்கும் சரியாக ெபாருந்தக் கூடியது. கபசுரக்குடிநீர் நுரையீரல் சார்ந்த நோய் தொற்றுகளை குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.

கபசுரக்குடிநீர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இம்காப்ஸ் நிறுவனம் போன்று முறையாக உரிமம் பெற்றுள்ளார்களா என்று பார்த்து வாங்க வேண்டும். டெங்கு காய்ச்சலின் போது நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு கொடுத்து டெங்கு நோய் பாதிக்காத வகையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதேபோன்று கொரோனா வைரஸ் தற்காப்பு முறை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், கொரோனா பாசிட்டிவிற்கு ஆளாகி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

 ஆங்கில மருத்துவ குழுவோடு சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களையும் இணைத்து ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ள மருந்துகளை மருத்துவர்களின் நேரடி பார்வையில் கொடுக்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 15 ஆயிரம் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவர்கள் தயாராக உள்ளனர். எனவே தமிழக அரசும் கபசுரகுடிநீர் வாங்கி மக்கள் பயன்பெற உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: