ஐ.பி.எல் தொடரை இலங்கையில் நடத்துங்க..! இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்திய நிர்வாகிகளுக்கு கடிதம்

கொழும்பு: கொரேனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐ.பி.எல் தொடரை தங்கள் நாட்டில் நடத்த இலங்கை முன்வந்துள்ளது. இதுதொடர்பாக ஐ.பி.எல் தொடரை இலங்கையில் நடத்த விருப்பம் தெரிவித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்திய நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஐ.பி.எல் 13-வது சீசனுக்கான போட்டிகள் மார்ச் 29-ம் தேதி மும்பையில் நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு மே-3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால் ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஐ.பி.எல் தொடர் நடைபெறாமல் போனால் பிசிசிஐ-க்கு 500 மில்லியன் டாலர் இழப்பு நேரிடும். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்திய நிர்வாகிகளுக்கு ஐ.பி.எல் தொடரை, இலங்கையில் நடத்த விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில், “இந்தியா ஐ.பி.எல் தொடரை இங்கு நடத்தினால் மருத்துவ நிபுணர்கள் மற்றும் தேவையான வசதிகளை செய்து தர நாங்கள் தயார். இதன் மூலம் இலங்கை கிரிக்கெட்டிற்கும் கணிசமான வருமானம் கிடைக்கும்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் ஐ.பி.எல் தொடர் நடைபெறுவது இது முதன்முறை அல்ல. 2009-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலும், 2014-ம் முதல் இரண்டு வாரங்கள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றது. இந்திய ரசிகர்கள் ஐ.பி.எல் தொடரை தொலைக்காட்சியில் கண்டு ரசிக்க முடியும். இதனால் பிசிசிஐ-க்கு குறைந்த அளவிலான வருமான இழப்பு மட்டுமே நேரிடும் என்பதால் இதனை பிசிசிஐ பரிசீலக்க வாய்ப்புள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸால் 230 பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: