பைப் லைன் உடைந்து சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்: கண்டுக்கொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்

கூடுவாஞ்சேரி: நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியின் 18 வார்டுகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையில் குடிநீர் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பெருமாட்டுநல்லூர் ஏரியில் உள்ள குடிநீர், நீரேற்று கிணற்றில் இருந்து பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பைப் லைனில் கடந்த சில நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீர் கசிந்து, வீணாக வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. அப்பகுதி மக்கள் குடிநீரின்றி கடும் அவதிப்படும் நேரத்தில், அவர்களுக்கு முறையாக கிடைக்காமல் தண்ணீர் வீணாவதை கண்டு அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Related Stories: