தருவைகுளத்திலிருந்து கொண்டு செல்லும் மீன்களை பறித்து குழி தோண்டி புதைக்கும் கேரள சுகாதாரத்துறை

குளத்தூர்:  தருவைகுளத்திலிருந்து செல்லும் மீன்களை கேரள எல்லையில் தடுத்து நிறுத்தும் அம்மாநில சுகாதாரதுறையினர் மண்ணில் குழி தோண்டி மீன்களை புதைத்து வருவதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள தருவைகுளத்தில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். 5 நாட்கள் முதல் 15 நாட்கள் வரையிலான தங்கு கடல் மீன் பிடித்து வரும் மீனவர்கள் தருவைகுளம் ஏலக்கூடம் மூலம் மீன்களை ஏலத்தில் விடுகின்றனர். மீன்களை ஏலம் எடுக்கும் மொத்த மீன் வியாபாரிகள் அவற்றை கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுக்கும் விதமாக கடந்த 24ம் தேதி 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவித்ததையடுத்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள்

செல்வதை தவிர்த்து வீட்டில் முடங்கினர். ஊரடங்கு அறிவிப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு சுமார் 30 படகுகளில்  2 வாரம் தங்கு கடலுக்கு சென்ற மீனவர்கள், கடந்த வாரம் முதல் ஒவ்வொரு படகாக கரை திரும்பி வருகின்றனர். அதிலிருந்த மீன்களை ஏலக்கூடத்தில் ஏலம் விடாமல் சமூக விலகலை கடைப்பிடிக்கும் விதமாக இரவு நேரங்களில் குறிப்பிட்ட சில மொத்த வியாபாரிகளுக்கு மொத்தமாக பிரித்து கொடுக்கப்படுகிறது. அதை அங்குள்ள வியாபாரிகள் கேரளாவிற்கு கொண்டு சென்று சாலையோரம் வரும் பொதுமக்களிடம் சில்லரையாக விற்பனை செய்து வருகின்றனர்.

 இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தருவைகுளத்திலிருந்து செல்லும் மீன்களை கேரள சுகாதார துறை அதிகாரிகள் எல்லையில் தடுத்து நிறுத்தி எந்தவித விசாரணையும் இன்றி மீன்களை பறித்து மண்ணில் குழிதோண்டி புதைத்து வருகின்றனர். இதனால் ஏலம் எடுத்த வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மொத்த மீன் வியாபாரி மனோகரன் கூறியதாவது: தருவைகுளம் கடல்பகுதியில் பிடிக்கபடும் கேறை, சூறை, சீலா, கட்டா, திருக்கை போன்ற பெரிய வகை மீன்களை எந்தவித பதப்படுத்தலும் இல்லாமல் பிரஷ்ஷாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதுடன் அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்து வந்தோம். இந்நிலையில் அரசு அறிவித்த ஊரடங்கை அடுத்து ஏலகூடம் மூடப்பட்டது. மேலும் ஊரடங்குக்கு முன்பாக சென்ற படகுகள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வரத்துவங்கியதையடுத்து அதிலிருந்த மீன்களை ஏலம் விடாமல் வியாபாரிகளுக்கு பிரித்து தரப்படுகிறது.

 மீன்கள் விற்பனைக்கு அரசு விலக்கு அளித்த நிலையில் எந்தவித ரசாயணப்பூச்சும் இல்லாமல் தான் கேரளாவிற்கு கொண்டு சென்று சாலையோரம் வருகிற பொதுமக்களிடம் சில்லறையாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வேறு மாநிலத்திலிருந்த சிலர் கொண்டுவரும் ஸ்டோரேஜ் மீன்களை சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து அழித்ததோடு இங்கிருந்து கொண்டு செல்லும் நல்ல மீன்களையும் எந்தவித பரிசோதனைகளுக்கும் உட்படுத்தாமல் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்களை குழி தோண்டி புதைக்கின்றனர். இதனால் வியாபாரிகள் பல லட்சம் நஷ்டத்துக்கு உள்ளாகிறோம்.மீன்களை கேரளாவிற்குள் கொண்டு செல்லக் கூடாது என்றால் திருப்பி அனுப்பியாவது விடலாம். அதை இங்கு கொண்டு வந்து மாசி, கருவாடு போன்றவைகளாக மாற்றிக் கொள்வோம். அதைவிடுத்து நல்ல மீன்களை குழி தோண்டி புதைப்பது நஷ்டப்படுத்துவதோடு,  மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகளை வேதனை அடையச் செய்கிறது. மேலும் இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு பாதிப்புக்குள்ளாகும் வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: