எல்ஐசி பிரீமியம் செலுத்த ஒரு மாதம் அவகாசம்

மும்பை: காப்பீடு பிரீமியம் செலுத்துவதற்கு, எல்ஐசி நிறுவனம் கூடுதலாக ஒரு மாத அவகாசம் வழங்கியுள்ளது.  இதுகுறித்து எல்ஐசி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு எல்ஐசி பிரீமியம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிரீமியம் தொகை செலுத்தவேண்டி இருந்தால், அதற்கான சலுகை காலம் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது. உதாரணமாக, கடந்த பிப்ரவரி மாதத்துக்கான பிரீமியம் செலுத்துவதற்கான சலுகைக்காலம் மார்ச்  22ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதற்கான அவகாசம் வரும் 15ம் தேதி வரை வழங்கப்படும்.  இதுபோல், எல்ஐசி பாலிசிதாரர்கள் ஆன்லைன் மூலம் சேவைக் கட்டணம் இன்றி பிரீமியம் செலுத்தலாம்.

இணையதளத்தில் பாலிசி விவரங்களை உள்ளீடு செய்தும், எல்ஐசி பே டைரக்ட் என்ற மொபைல் ஆப்ஸ் மூலமாகவும் செலுத்தலாம். இணைய வங்கிச்சேவை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பேடிஎம், போன் பே, கூகுள் பே, பீம், யுபிஐ போன்ற பேமன்ட் ஆப்ஸ்கள் மூலம் கட்டணத்தை செலுத்த முடியும். அதோடு, அனைத்து ஐடிபிஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கி கிளைகளிலும், பொது சேவை மையங்களில் ரொக்கமாகவும் பிரீமியம் தொகையை செலுத்தலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் பாலிசி தொகை, முன்னுரிமை அளிக்கப்பட்டு உடனடியாக வழங்கப்படும் என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: