‘இவங்களுக்கு’ இல்லையா ஊரடங்கு உத்தரவு? மூணாறு குடியிருப்புகளில் யானைகள் `ஜாலி ரவுண்ட்’: வாழைகளை தேடி வருவதால் மக்கள் பீதி

மூணாறு: மூணாறில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் காட்டுயானைகள் சகஜமாக ஊருக்குள் புகுந்து நடமாடுகின்றன.கேரள மாநிலம், மூணாறில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் முக்கிய பகுதிகள் ஆரவாரம் இல்லாமல்  அமைதியாக கிடக்கின்றன. இதனால் காட்டுயானைகள் ஊருக்குள் நுழைந்து சுதந்திரமாக உலா வரத் துவங்கியுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ‘படையப்பா’ என்று அழைக்கப்படும் காட்டுயானை மூணாறு காலனி பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது. அங்கிருந்த வாழை மற்றும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி விட்டு சென்றது. இதே யானை நேற்று முன்தினம் இரவு மூணாறு அந்தோணியார் காலனி பகுதியில் புகுந்தது.

அங்கிருந்த வாழை மரங்களை நாசம் செய்து தின்றுவிட்டு, அப்பகுதியில் அதிகாலை வரை சுற்றித்திரிந்தது. பின்னர் மீண்டும் காட்டுக்குள் சென்றது. வீடுகளின் முன்புள்ள  வாழையை மட்டும் நோட்டமிட்டு கபளிகரம் செய்ய வரும் இந்த யானையால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.இதேபோல் மூணாறு லெச்சம் காலனி, பெரியவாறை, நல்லத்தண்ணி, கன்னிமலை போன்ற பகுதிகளிலும் யானைகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. யானைகள் மட்டுமின்றி காட்டு பன்றிகள், காட்டுமாடுகள் தொந்தரவும் அதிகரித்துள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் வன விலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: