கொரோனா பாதிப்பால் ஊட்டியில் மலர் கண்காட்சி நடத்துவதில் சிக்கல்

ஊட்டி: கொரோனா பாதிப்பால் மலர் கண்காட்சி நடக்குமா என்ற சந்தேகம் உள்ள போதிலும், தொடர்ந்து குறைந்த அளவிலான தொழிலாளர்களை கொண்டு தாவரவியல் பூங்கா பொலிவுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு கோடையில் வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டு தோறும் மே மாதம் முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.

இம்முறையும் வழக்கம் போல், ஊட்டி தாரவியல் பூங்காவை மலர் கண்காட்சிக்காக தயார் செய்யும் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் துவங்கி நான்கு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. தற்போது பெரும்பாலான செடிகள் வளர்ந்த நிலையில், ஒரு சில செடிகளில் பூக்கள் பூக்கத் துவங்கியுள்ளன. நாள் தோறும் இந்த மலர் செடிகளை பராமரிக்கும் பணியிலும், பூங்காவை பொலிவுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால், கடந்த 15 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போதிலும், தொடர்ந்து பூங்கா தயார் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இம்முறை மலர் கண்காட்சி உட்பட அனைத்து கண்காட்சிகளும் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்த போதிலும், ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெற்றால், அடுத்த மாதம் முதல் வரும் சுற்றுலா பயணிகள் எமாற்றம் அடையாமல் இருக்க தொடர்ந்து பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா போன்றவைகள் பொலிவுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தொழிலாளர்கள் சமூக இடைவெளி விட்டு தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: