மின்கம்பி உரசி தீ விபத்து 3 ஏக்கர் கரும்புகள் எரிந்து நாசம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே சூறைக்காற்றில் மின்கம்பி உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமானது. உத்திரமேரூர் பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தவேளையில், நேற்று முன்தினம் மாலை திடீரென பலத்த சூறாவளி காற்றுடன், கனமழை பெய்தது. இதனால், சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இந்நிலையில், உத்திரமேரூர் அடுத்த மேனல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் கரும்பு பயிரிட்டு, அறுவடைக்கு தயாராக இருந்தது.

அவ்வழியாக செல்லும் மின்வயர்கள், பலத்த சூறைக்காற்றால், ஒன்றோடு ஒன்று உரசியது. இதில், தீப்பொறி ஏற்பட்டு, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது கரும்பு தோட்டத்தில் விழுந்து தீப்பற்றியது. காற்று பலமாக வீசியதால், தீ மளமளவென பரவி, கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்தது. தகவலறிந்து உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, தீயை அணைத்தனர். அதற்குள், சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த கரும்புகள் எரிந்து நாசமாயின.

Related Stories: