விட்டா போதும்டா சாமீ.... வுகானை விட்டு மக்கள் ஓட்டம்

வுகான்: சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதனால் அந்நகரில் 76 நாள் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ராணுவ கட்டுப்பாட்டில் ஒருவர் கூட, இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வர அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்நகரை சேர்ந்த 1 கோடி மக்கள் மட்டுமின்றி, தொழில், வேலை விஷயமாகவும், உறவினர் வீட்டுக்கும், பொருட்கள் சப்ளை செய்யவும் என பல்வேறு விஷயங்களுக்காக வந்தவர்களும் மாட்டிக் கொண்டு நரக வேதனை அனுபவித்தனர். தற்போது நோய் தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதால் நேற்று அதிகாலையில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்வதற்கான பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. அனைத்து பயண தடை, சாலை தடுப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டன. அந்நகரம் முழு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது.

இதனால், நிம்மதி அடைந்துள்ள ஆயிரக்கணக்கான வெளி மாகாண மக்கள் விட்டால் போதுமென்று முதல் ரயில், முதல் விமானத்திலேயே சொந்த ஊர்களுக்கு பறந்தனர். 55,000 பேர் ரயில் மூலமாக வெளியேறினர். ஒரே காரில் 6, 7 பேர் என முண்டியடித்து, வுகானை விட்டு வெளியேறினர். ‘‘பொருட்களை டெலிவரி தருவதற்காக வந்து இரண்டரை மாதம் மாட்டிக் கொண்டேன். இனி வுகான் பக்கமே தலைவைத்து படுக்க மாட்டேன்’’ என்றார் ஒரு இளைஞர். ஒரே நாளில் 200 விமானங்கள் வுகானில் இருந்து சென்றுள்ளன.

Related Stories: