கொரோனா தடுப்பு நடவடிக்கை தூய்மை பணியாளருக்கு பாதபூஜை செய்து நன்றி

பொங்கலூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளருக்கு பல்லடத்தில் பாதபூஜை செய்து நன்றி தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நகராட்சி சார்பில் 150க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், பல்லடம் நகராட்சிக்குட்பட்ட கணபதி நகரில் தூய்மை பணியாளர் வசந்தா பணியில் ஈடுபட்டு வருகிறார்.

Advertising
Advertising

நேற்று துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அப்பகுதியை சேர்ந்த புஷ்பா என்ற பெண்மணி அவருக்கு பாதபூஜை செய்து, பணமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அவருக்கு புதிய புடவை வழங்கி தனது நன்றியை தெரிவித்தார். இதை அறிந்த பல்லடம் நகராட்சி ஆணையாளர் கணேசன், பல்லடம் டி.எஸ்.பி. முருகவேல் ஆகியோர் புஷ்பா வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து அவரை பாராட்டினர். பொதுமக்களும் தூய்மை பணியாளரையும், அவரை கவுரவித்து பரிசளித்த புஷ்பாவையும் பாராட்டி மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Related Stories: