வேகப்பந்து வீச்சாளர்கள் தயாராவது கடினம்... நெஹ்ரா கவலை

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், வேகப் பந்துவீச்சாளர்கள் மீண்டும் களமிறங்கத் தயாராவது கடினமாகி விடும் என்று முன்னாள் நட்சத்திரம் ஆசிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டாலும், உடனடியாக இயல்பு வாழ்க்கை திரும்புவது சந்தேகம் தான். அதற்கு நீண்ட காலமாகும். என்னை பொறுத்தவரை ஜூலை மாதத்துக்கு முன்பாக கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் பழைய உற்சாகத்துடன் தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை. இது மிகப் பெரிய இடைவெளியாகும். அப்படியே தொடங்கினாலும், வேகப் பந்துவீச்சாளர்கள் முழு உடல்தகுதியுடன் இருப்பது மிகப் பெரிய சவால் என்று தான் சொல்வேன்.

Advertising
Advertising

ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதற்கான இடமும், நேரமும் இல்லாதது இவர்களுக்கு மிகப் பெரிய பிரச்னையாகவே இருக்கும். ஆனாலும், இன்றைய சூழ்நிலையில் இதை தவிர்க்க முடியாது. மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கிடைக்கும் வரை வீட்டு மொட்டை மாடி அல்லது தோட்டத்தில் ஓடி பயிற்சி பெறுவது அவசியம். பேட்ஸ்மேன்கள் என்றால் யோகா மற்றும் லேசான உடற்பயிற்சி செய்து சமாளித்து விடலாம். ஆனால், வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அது போதாது. நீச்சல், சைக்கிள் ஓட்டுதலை விடவும் ஓட்டப் பயிற்சி தான் பவுலர்களுக்கு முக்கியம்.

கொரோனா பிரச்னை ஜூன் மாதம் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்த்தாலும், அதன் பிறகு ஒரு மாத அவகாசம் கிடைத்தால் தான் கிரிக்கெட் வீரர்கள் முழுவீச்சில் தயாராக முடியும். ஐசிசி மற்றும் பிசிசிஐ நிர்வாகம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு நெஹ்ரா கூறியுள்ளார்.

Related Stories: