கோரன்டைன் வார்டுகளில் தொலைக்காட்சி வசதி மாவட்டந்தோறும் பரிசோதனை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை பெறுபவர்கள் நலன் கருதி தொலைக்காட்சி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையின் நவீன இயந்திரம் கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பணியை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். இதன்பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் தீயணைப்பு துறையின் நவீன வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள 4500க்கு மேற்பட்ட கட்டிடங்களில் தீயணைப்பு துறையின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பி விழுப்புரம் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர் மரணம் அடைந்தது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்கும். ெகாரோனா சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார். இதன்படி ராமசந்திரா, மியாட், சவிதா உள்ளிட்ட மருத்துவமனைகள் படுக்கைகளை ஒதுக்கியுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் உள்ளவர்கள் மன வலிமையோடு இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அனைத்து வார்டுகளிலும் தொலைக்காட்சி வசதி ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். இதன்படி தொலைக்காட்சி வசதிகள் செய்யப்பட்டுவருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: