கேரளாவில் தடையை மீறி காலையில் நடைப்பயிற்சி சென்ற பெண்கள் உட்பட 41 பேர் கைது: டிரோன் மூலம் கண்காணிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஊரடங்கு தடையை மீறி கும்பலாக நடைப் பயிற்சி செய்த பெண்கள் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள   மாநிலம், கொச்சி பனம்பிள்ளிநகர் பகுதியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள சிறப்பு பாதை   உள்ளது. தற்போது, கொரோனா ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் இங்கு நடைப்பயிற்சி   செய்யக்கூடாது என போலீசார் எச்சரித்திருந்தனர். ஆனாலும், இது குறித்து கவலைப்படாமல் பலர் இங்கு தினமும்   நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

 டிரோன் கேமரா மூலம் இதை கவனித்த போலீசார், நேற்று காலை, நடை பயிற்சி செய்த 2   பெண்கள் உட்பட 41 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது தொற்று நோய்   தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி,   இவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும்   விதிக்க முடியும்.

தண்டவாளத்தில் 400 கி.மீ. நடந்து வந்த முதியவர் கைது:

திருவனந்தபுரம் மத்திய   ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை தண்டவாளத்தில் ஒரு முதியவர் நடந்து சென்று   கொண்டிருந்தார். ரயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் கோட்டயம் எரிமேலி பகுதியை சேர்ந்த பிரசாத் (68) எனவும்,   மானாமதுரையில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து செல்வதாகவும் தெரிவித்தார். கொரோனா முடக்கத்துக்கு முன்பாக, ராமேஸ்வரம் கோயில் தரிசனத்துக்கு சென்ற இவர், திடீரென ஊரடங்கு   அறிவித்ததால் மாட்டிக் கொண்டார்.

கிடைத்த வாகனங்களில் ஏறி   மானாமதுரைக்கு வந்துள்ளார். அங்கிருந்து எந்த வாகனமும் கிடைக்காததால்,  ஊருக்கு ெசல்வதற்காக 400 கிமீ தூரம் ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து   வந்துள்ளார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து தனிமை வார்டில்  அனுமதித்தனர்.

உற்சாகப்படுத்திய நடிகை

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை அளிக்கும் மருத்துவத் துறையினரை உற்சாகப்படுத்தும் வகையில் நடிகர், நடிகைகளை தொலைபேசியில் பேச வைக்கும் திட்டத்தை இளைஞர் காங்கிரசார் செயல்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர், கொரோனா நோயாளிகள், மருத்துவத் துறையினர், 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவோர் மற்றும் கோட்டயத்தில் வயதான தம்பதிக்கு சிகிச்சை அளித்ததால் நோய் பாதிக்கப்பட்ட நர்ஸ் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

Related Stories: