விருதுநகர்: கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பருப்பு, பயறு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வரத்து இல்லாததால், விருதுநகர் சந்தையில் மொத்த வணிகம் 2வது வாரமாக முடங்கி கிடக்கிறது. விருதுநகர் சந்தைக்கு கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்கள் மற்றும் பர்மாவில் இருந்து பயறு, பருப்பு வகைகள், ஆந்திராவில் இருந்து வத்தல், புளி, சீரகம், கடுகு, சோம்பு, ராஜஸ்தானில் இருந்து மல்லி வருகிறது. மார்ச் மாதத்தில் கொள்முதல் நிறுத்தப்பட்ட நிலையில் ஏற்கனவே பருப்பு, மல்லி, வத்தல் குடோன்கள், மில்களில் இருப்பு குறைவாக இருந்தது. திடீரென கொரோனா பரவலை குறைக்க மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் அனைத்து பொருட்கள் வரத்து முற்றிலும் நின்று போனது.