பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு மேலப்பாளையம் மண்டல அலுவலகம் சுகாதார பணியாளர்கள் முற்றுகை

நெல்லை: கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள போதிய பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு சுகாதார பணியாளர்கள் இன்று காலையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்லையில் நேற்று மட்டுமே 22 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் மேலப்பாளையம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வேலை செய்யும் சுகாதாரம் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை.

மேலும் நேற்று இரவில் சுகாதார பணியாளர்கள் தெருக்களுக்கு செல்லும்போது போலீசார் அவர்களை அடிக்க முயன்றுள்ளனர். தொழிலாளர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே பணியாளர்களுக்கு பாதுகாப்பும், போதிய உபகரணங்களும் வேண்டும் எனக்கோரி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை சுகாதார பணியாளர்கள் இன்று காலையில் முற்றுகையிட்டனர். சிஐடியூ மாவட்டச்செயலாளர் மோகன் தலைமையில்  பணியாளர்கள் திரண்டனர். பணிக்கு யாரும் செல்ல மாட்டோம் என கோஷம் எழுப்பினர். மேலப்பாளையம் மண்டல அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் போதுமான அளவு முக கவசம் மற்றும் கையுறை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பணியாளர்களுக்கு உடனடியாக அவை கொண்டு வந்து வழங்கப்பட்டது. மேலும் முழு நாள் வேலையை காலை 11 மணி வரை மட்டுமே வேலை செய்தால் போதும். தொழிலாளர்கள் யாரும் தெருக்களுக்கு குப்பை வாங்க செல்ல வேண்டாம். ரோடுகளை மட்டும் சுத்தம் செய்தால் போதும். போலீஸ் பிரச்னை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கலாம் என பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது. அதன்பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு சென்றனர்.

சுகாதார பணியாளர்கள் போராட்டம் காரணமாக இன்று காலையில் 2 மணி நேரம் துப்புரவுப்பணி நிறுத்தப்பட்டது. முற்றுகை போராட்டத்தில் நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் முருகன்,  செல்லத்துரை, மாரியம்மாள்,  சுடலை, சுந்தராஜன் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.

Related Stories: