சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையம் மூடல்: விவசாயிகள் வேதனை

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையம் மூடியதால், அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமலும், வயலில் உள்ள நெல்லை அறுவடை செய்ய முடியாமலும் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவாலவாய நல்லூரில் சில மாதங்களுக்கு முன் நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது. இதனால் இவ்வூரைச் சுற்றியுள்ள விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை இங்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நெல் கொள்முதல் நிலையமும் மூடப்பட்டது.

இதனால் இங்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த சுமார் 4 ஆயிரம்  மூடை நெல் மணிகள் குவியலில் வீணாக கிடக்கிறது. மேலும் திருவாலவாய நல்லூர், நெடுங்குளம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சுமார் 80 ஏக்கர் வயலில் விளைந்த நெல்லையும்,அறுவடை செய்ய இயலவில்லை. இதனால் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் கண்ணீரில் தவிக்கின்றனர். இது குறித்து நெடுங்குளம் விவசாயி பெருமாள் கூறுகையில்,‘‘நெல் கொள்முதல் நிலையம் மூடியதால் விற்பனையின்றியும், அறுவடை செய்ய இயலாமலும் விவசாயிகள் பரிதவித்து வருகிறோம். இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் கூறியும் பலனில்லை.

தற்போது ஊரடங்கிலும் விவசாயப் பணிகளுக்கும், விவசாய பொருட்கள் விற்பனை செய்வதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றார்.

Related Stories: