கடையை உடைத்து ரூ1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில் கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி கிராமத்தை ஒட்டி,  மாந்தோப்பு பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடையை உடைத்து ஏற்கெனவே ரூ70 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, இக்கடையை போலீசார் இரவு ரோந்து பணிகளின்போது கண்காணித்து வருவது வழக்கம். இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு  விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இக்கடையை இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் ரோந்து பணியின்போது சோதனை செய்தனர்.

Advertising
Advertising

அப்போது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டனர். இதுகுறித்து அக்கடையின் மேலாளர் ராக்கம்பாளையத்தை சேர்ந்த துளசிராமனுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து கடைக்குள் சோதனை செய்ததில், அங்கு விற்பனைக்கு வைத்திருந்த ரூ1 லட்சம் மதிப்புள்ள 10 பெட்டி மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து, கடைக்குள் இருந்த 4 சிசிடிவி காமிராக்களை உடைத்து சென்றிருப்பதும் தெரியவந்தது. துளசிராமன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: